திருவண்ணாமலை அடிஅண்ணாமலை கிராமத்தில் ஆதி அண்ணாமலை கோவில் உள்ளது. இந்த கோயிலுக்குள் உபகோயிலாக மாணிக்கவாசகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் கிழக்குப்புற மதில் சுவற்றின் கீழே இதுவரை பதிவு செய்யப்படாத கல்வெட்டு ஒன்று இருந்துவந்தது. ஸ்வஸ்தஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் அந்த கல்வெட்டில், சுந்தரபாண்டியன் என்று சொல்லப்பட்டவர் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது. பிற்கால பாண்டியர்களில் எந்த சுந்தர பாண்டியன் என்று மெய்க்கீர்த்தியில் தெளிவான விவரங்கள் சொல்லப்படவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து ஆய்வில் இறங்கிய திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆர்வலருமான ராஜ் பன்னீர்செல்வம், இக்கல்வெட்டில் உள்ள ஸ்ரீ விக்கிரம சோழ தேவர் என்பாரும், சேதி மண்டலத்து நாட்டார் சபையும் சேர்ந்து நெல்வாய் என்ற ஊரில் உள்ள நிலத்தை இறையிலி (வரி நீக்கிய) நிலமாக அறிவித்து, அதில் ஒருபாதியை இக்கோவிலில் உள்ள திருப்பெருந்துறை உடைய நாயனார்க்கும், மற்றொருபாதியை திருவாதவூர் நாயனார்க்கும் தானமாக வழங்கிய செய்தியை அறியமுடிகின்றன என்கிறார்.
மேலும், "புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் உள்ள இறைவனை திருப்பெருந்துறை உடைய நாயனார் என்றும், மதுரை அருகே உள்ள திருவாதவூரில் அவதரித்ததால் மாணிக்கவாசகரைத் திருவாதவூர் நாயனார் என்றும் அழைப்பர். ஆவுடையார் கோவில் ஆத்மநாத சாமி கோவிலில் உள்ளது போலவே இக்கோவிலிலும் மாணிக்கவாசகர் முன் ஆவுடையாக சிவபெருமான் காட்சியளிக்கிறார்.
இக்கல்வெட்டில் குறிக்கப்படும் ஸ்ரீ விக்கிரம சோழ தேவர் என்பவர், இரண்டாம் சடையவர்மன் குலசேகரனின் ஆட்சியில் உயர் அதிகாரியாக பணியாற்றியதை, அண்ணாமலையார் கோவிலில் உள்ள முதலாம் சடையவர்மன் விக்கிரம பாண்டியனின் (1241-1250) இரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி 1243) மூலம் அறியமுடிகிறது. மேலும் சேதிராயர்கள் என்பவர்கள், நடுநாட்டில் திருக்கோவிலூரைத் தலைமையிடமாக வைத்து ஆட்சி செய்த சிற்றரச வம்சம் ஆகும். இவர்கள் பற்றிய குறிப்புகளும் அண்ணாமலையார் கோவிலின் இதேகாலத்தை ஓட்டிய மற்ற கல்வெட்டுகளில் வருவதை அறியமுடிகிறது. இந்த சேதிராயர் நாட்டில் உள்ள சபையும், ஸ்ரீ விக்கிரம சோழ தேவர் என்னும் உயர் அதிகாரியும் இணைந்து இத்தானத்தை வழங்கியுள்ளனர்.
இக்கல்வெட்டின் ஆட்சி ஆண்டையும் தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, இது 1238-1240 வரை ஆட்சிபுரிந்த இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் தம்பியும், அவனுடன் சிறிது காலம் இணை ஆட்சி புரிந்தவனுமான "இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்" காலத்திய தானம் என்று எடுத்துக் கொள்ளலாம். இது அம்மன்னனின் இரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு என்பதால் இதனை கி.பி 1240 ம் ஆண்டு கல்வெட்டு என்று எடுத்துக் கொள்ளலாம்.
திருவண்ணாமலை பகுதியானது இதே காலகட்டத்தில் சோழப் பேரரசன் மூன்றாம் ராஜராஜனின் சிற்றரசாக விளங்கிய காடவராயன் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் ஆளுகைக்கு உட்பட்டு ஏராளமான கொடைகளை அண்ணாமலையார் கோவிலுக்கு வழங்கியுள்ளதைக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
மூன்றாம் ராஜராஜனை கி.பி 1231 ல் சேந்தமங்கலத்தில் சிறை வைத்த பொழுது சோழர்கள், ஹொய்சாலர்கள் உதவியை நாடினர். கோப்பெருஞ்சிங்கன் தன்னை காத்துக் கொள்ளப் பாண்டியர்களிடம் நட்புறவு பூண்டமையால் இக்காலகட்டத்தில் மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டுகளுடன் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் மற்றும் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கல்வெட்டுகளும் திருவண்ணாமலையிலும், நடுநாட்டில் சில இடங்களில் கிடைக்கிறது.
இதன் மூலம் 1240 ம் ஆண்டு வாக்கில் மூன்றாம் ராஜராஜன் சோழ பேரரசிற்குக் கீழ் அரசாண்ட சிற்றரசுகளான காடவராயர்கள், சம்புவராயர்கள், சேதிராயர்கள் யாவரும் மறைமுகமாகப் பாண்டியர் தலையெடுப்பிற்கு அடிகோலினர் என்று அறியமுடிகிறது. இதன் விளைவாகப் பின்னாளில் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி 1251 எழுச்சி கொண்டு மூன்றாம் ராஜேந்திரனை வென்று சோழ நாட்டை கைப்பற்றினான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள் கல்வெட்டுத் தகவல்களை ஆய்வு செய்து அதுகுறித்த தகவல்களை உறுதி செய்துள்ளனர்" என்றார்.