தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயரப்போகிறது என்ற தகவல் அடித்தட்டு மக்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது. ஆந்திர, கர்நாடக மாநிலங்களை ஒப்பிட்டு, அந்த மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவுதான் என்ற ஒப்பீட்டுக் கணக்கினை, அன்றாடச் செலவுகளுக்கே அல்லாடும் சாமானிய மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் “மக்களைப் பாதிக்காத வகையில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதாகச் சொல்வதை ஏற்கமுடியாது. கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள்” எனக் கூறுகிறார்.
தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல், பேருந்துப் பயண அட்டை இல்லாமல் பயணம் செய்யலாம் என ‘மாற்றி யோசித்து’ அரசாணை பிறப்பித்த திமுக அரசாங்கத்தால், பயன்பெற்ற பெண்களின் எண்ணிக்கை 115 கோடி எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.
2021-22 நிதியாண்டில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கூடுதல் செலவினம் ரூபாய் 4,443 கோடி என்றும், ரூபாய் 2,732 கோடி வருவாய் இழப்பென்றும், நிர்வாகச் சிக்கலை தமிழக அரசு எடுத்துக்கூறினாலும், அது மக்களின் செவிகளை எட்டாமல், அதிருப்தியே மேலோங்கும்.
டெல்லி அரசாங்கம் என்ன செய்திருக்கிறது? பொதுப் போக்குவரத்தில் 1,500 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை அறிமுகம் செய்திட, டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு, 11 வழித்தடங்களில் தாழ்தள மின்சாரப் பேருந்துகளை இயக்கவுள்ளனர்.
நஷ்டத்திலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மீட்க, வல்லுனர் குழு அமைத்தது, எரிபொருளைச் சிக்கனப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்குவதெல்லாம் சரிதான்! ஆனாலும், ஒருபுறம் மகளிர்க்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், இன்னொருபுறம் பேருந்துக் கட்டண உயர்வு என்பது, ‘ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு’ வைப்பதை போல் இருக்கிறது என்று விமர்சிக்கப்படுகிறது.