
கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகரிலுள்ள நடு தெருவில் வசித்து வருபவர் பாரதி (52). இவரது மனைவி ராஜேஸ்வரி (41). இவர்களுக்கு 25 வயதில் லாவண்யா, 22 வயதில் ஜெயந்தி என்ற இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் பட்டப்படிப்பு படித்துள்ளனர். இவரது மூத்த மகள் லாவண்யா, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புதிதாக வாங்கிய மொபட் வண்டியில் விருத்தாசலத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அந்த வாகனத்தைப் பதிவு செய்வதற்காக தனது உறவினருடன் அதே வாகனத்தில் சென்றுள்ளார்.
மோட்டார் வாகன அலுவலகத்தில் பணிகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து மீண்டும் திட்டக்குடி திரும்பி வரும்போது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாரதி, ராஜேஸ்வரி இருவரும் தங்கள் மூத்த மகள் லாவண்யா மீது மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளனர். அப்படிப்பட்ட அருமை மகள் லாவண்யாவின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல், மிகுந்த துக்கத்தில் இருந்துவந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (27.05.2021) இரவு கணவன் மனைவி இருவரும் தூங்கச் சென்றனர். மறுநாள் காலை வெகுநேரமாகியும் கணவன் மனைவி இருவரும் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்களது இளைய மகள் ஜெயந்தி, அருகில் சென்று தாய் தந்தை இருவரையும் எழுப்பிப் பார்த்துள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் எந்த அசைவும் இன்றி படுக்கையில் கிடந்துள்ளனர்.
அவர்கள் அருகில் காலியான விஷ பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயந்தி கதறி அழுதபடி அக்கம்பக்கத்தினரிடம் ஓடிவந்து கூறியுள்ளார். அவர்கள் உதவியுடன் அவர்கள் இருவரையும் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து திட்டக்குடி போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர், இருவரின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி உள்ளிட்ட போலீசார் வழக்குப் பதிவுசெய்து, இருவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் துக்கத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குடும்பத்தில் தற்போது இருக்கும் அவர்களது இளைய மகள் ஜெயந்தியின் எதிர்காலம் குறித்து அவரது உறவினர்கள் வேதனையிலும் சோகத்திலும் உள்ளனர்.