கிருஷ்ணகிரி அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு மயக்க குளிர்பானம் கொடுத்து, அவர் அணிந்திருந்த 5 லட்சம் ரூபாய் தங்க நகைகளை மர்ம நபர் திருடிச்சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள அக்கொண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் நஞ்சுண்டரெட்டி. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி லட்சுமி அம்மா (68). கணவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் லட்சுமி அம்மா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு லட்சுமி அம்மா வீட்டிற்கு வந்த மர்ம நபர், தான் வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கியதாகவும், நிலப் பத்திரத்தை அவருடைய பூஜை அறையில் வைத்து வழிபட்டு தனக்கு கொடுக்கும்படியும் கூறியுள்ளார். இதை நம்பிய லட்சுமி அம்மா, அவர் கொடுத்த பத்திரத்தை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து மீண்டும் அந்த நபரிடம் கொடுத்துள்ளார். மார்ச் 14ம் தேதி மாலை, லட்சுமி அம்மாவின் வீட்டுக்கு மீண்டும் வந்த அந்த நபர், தான் வாங்கி வந்த குளிர்பானத்தை குடிக்கும்படி கொடுத்துள்ளார். அதை வாங்கிக் குடித்த லட்சுமி அம்மா சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார்.
இதையடுத்து அந்த மர்ம நபர், லட்சுமி அம்மா அணிந்திருந்த நான்கு பவுன் வளையல், 4 பவுன் சங்கிலி உள்ளிட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சுமார் இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு மயக்கம் தெளிந்த லட்சுமி அம்மா, தன்னுடைய நகைகள் திருடுபோனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் தன் உறவினர்களுக்கு தகவல் அளித்து பின்பு கெலமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மூதாட்டி தனியாக வீட்டில் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர், முதலில் அவரிடம் வந்து நைச்சியமாக பேசி தன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதும், அதன் பிறகு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மூதாட்டிக்கு குடிக்கக் கொடுத்து, அவர் அணிந்திருந்த நகைகளைத் திருடிச் சென்றிருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. நிகழ்விடம் மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.