Skip to main content

“தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரச்சனையை தீர்க்க வேண்டும்” - இ.பி.எஸ்

Published on 09/10/2024 | Edited on 09/10/2024
 Solve the problem by respecting feelings of workers says edappadi palanisamy

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்பதாம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அதில் உடன்பாடு எட்ட முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து நேற்று முப்பதாவது நாளாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் வீடுகளுக்கு சென்ற போலீசார் 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இதில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதேநேரம் போராட்ட பந்தல்கள் நள்ளிரவில் அகற்றப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தற்பொழுது போலீசாரின் தடுப்புகளை மீறி 200 க்கும் மேற்பட்ட சாம்சங் பணியாளர்கள் பேரணியாக நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளளர்-நிறுவனம்-அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் திமுக அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்? போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்கத் திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுகொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன்,  தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரியப் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்