Skip to main content

2018 - தமிழக அரசியல் 

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
eps-stalin-ttvd



*
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின்னர் தினகரன் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். கோதண்டபாணி, ஜெயந்தி பத்மநாபன், கலைச்செல்வன், கதிர்காமு, எஸ்ஜி சுப்ரமணியன், முத்தையா, சுந்தர்ராஜ், மாரியப்பன் கென்னடி, உமா மகேஸ்வரி ஆகியோர் 02/01/2018 முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.



*
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொள்வதாக சில மாவட்டங்களுக்கு சென்றார். இதற்கு திமுக கடும் எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் ஆய்வுக்கு வரும் ஆளுநருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி தஞ்சை உள்ளிட்ட மாவட்ங்களுக்கு சென்ற ஆளுநருக்கு எதிராக திமுகவினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 
*
திரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப்பட்டது போல, தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்தால் ஈ.வெ.ரா. சிலைகள் அகற்றப்படும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்து இருப்பது பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், தந்தை பெரியார் சிலையை தொட்டுப் பார்க்கும் அளவுக்கு எவருக்கும் தகுதி கிடையாது என்பது தான் என்னுடைய கருத்து என்றார். 



*
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை டிடிவி தினகரன் மார்ச் 15 அன்று மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். 



*
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் 30-03-2018 அன்று திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகின்ற நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கறுப்பு கொடி காட்டுவதென்று முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். 



*
வேலூரில் அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடந்த இடத்தற்கு அருகில் தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார் மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி ஒருவர்.  குழு குழுவாக பந்தலில் இருந்த தொண்டர்கள், நிர்வாகிகள் வந்து, சாப்பிட்டுவிட்டு சென்றனர்.



*
காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றது. இதனால் ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அப்போது நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மலைகளில் இருக்கும் அனைத்து நாகப் பாம்புகளை எடுத்து வந்து மைதானத்தில் விடப்போகிறார்கள் என வாட்ஸ் ஆப்களில் செய்திகள் வளம் வருகிறது. அந்த பாம்புகளை பிடிக்க விளையாட்டு வீரர்களும், காவல்துறையினரும் ஐபிஎல் விளையாட போகிறார்கள். நாங்கள் வேடிக்கை பார்க்க போகிறோம். நூற்றுக்கணக்கான பாம்புகளை விடப்போவதாக கூறுகிறார்கள் என தெரிவித்தார்.



*
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 12/04/2018 அன்று தி.மு.க., தலைவர் கலைஞர் வீட்டிலும், தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. 



*
எதிர்ப்புகளை சமாளிக்க தனக்கென ஒரு அரசியல் அமைப்பு இருக்க வேண்டும்மென விரும்பிய நித்தியானந்தா, திருவண்ணாமலையை சேர்ந்த சில இளைஞர்கள் மூலமாக குழுவை அமைத்து, நித்தியானந்தா அரசியல் சேனை ஆன்மீக அரசியல் அமைப்பை துவங்கினார்.



*
நீதிபதிகளின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பு கிளப்பிய நீதிபதி கர்ணன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஊழலுக்கு எதிரான மாற்றுக் கட்சி (Anti - Corruption Dynamic Party) என்ற கட்சியின் பெயரை அறிவித்தார். நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் ஊழலை ஒழிப்பதே தனது கட்சியின் கொள்கை என அவர் தெரிவித்திருக்கிறார். 


*

20/05/2018 அன்று சென்னை போயஸ் கார்டனில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆன்மீக அரசியல் என்றால் ரஜினியுடன் கூட்டணி வைப்பதில் சற்று யோசிப்பேன் என கமலஹாசன் கூறியுள்ளது பற்றிய கேள்விக்கு  ''இன்னும் பார்ட்டியே ஆரம்பிக்கல அதுக்குள்ள கூட்டணியா'' என நகைச்சுவையாக பதிலளித்தார். 




*
சென்னையில் 23/05/2018 அமைச்சர் ஆ.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுகிறதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களை இந்த அரசு எதிர்கொண்டிருக்கிறது. ஆகவே இது முதல் போராட்டம் அல்ல. முதல் அமைச்சரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் மக்களின் அறியாமையை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன. ஆகவே இது திட்டமிட்டு நடைப்பெற்றதா திட்டமிடாமல் நடைப்பெற்றதா என்பது அல்ல. இதுபோன்ற சூழ்நிலை நடந்திருக்கக்கூடாது என்பதுதான் எல்லோருடைய எண்ணம் என கூறினார்.



*
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த வன்னியர் சங்கத்தலைவரும், பாமகவின் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காடுவெட்டி ஜெ.குரு (57) காலமானார். 



*
சென்னை அண்ணா அறிவாலயத்தில், மாதிரி சட்டமன்றக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற திருவாடானை எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் கலந்து கொண்டு, கூவத்தூர் சம்பவங்களை குறிப்பிட்டு பேசினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


 

*
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார். பிரதீபா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 




*
சசிகலாவின் சகோதரர் திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கட்சி பெயரை அறிவித்த அவர், கட்சிக்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார். 




*
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளோம். அதில் ஒருவர் கூட எடப்பாடி பழனிசாமி அணிக்கு செல்ல மாட்டார்கள் என அமமுக கொள்கைப்பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் கூறினார். 



*
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் ஈரோட்டில் 25/06/2018 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரன், யார் இந்த டி.டி.வி.தினகரன்? என முதல்-அமைச்சர் பழனிசாமி கேட்கிறார். கட்சியில் இல்லாத என்னை, எங்கள் துணை பொதுசெயலாளர் என்று தேர்தல் ஆணையத்தில் ஏன் மனு கொடுத்தீர்கள்? ஆர்.கே.நகர் தொகுதியில் எனது ஜீப்பில் தொற்றிக்கொண்டு ஏன் ஓட்டுக் கேட்டீர்கள்? அ.தி.மு.க. எங்கள் வசம்தான் உள்ளது. இந்த ஆட்சி கலைந்தால் அனைவரும் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள் என பேசினார். 


*
சட்டமன்றத்தில்  27/06/2018ல் பேசிய துரைமுருகன், ’சேக்ஸ்பியர் சொன்னதுபோல் அனைத்து எம்எல்ஏக்களும் நடிக்கிறோம் சபாநாயகரும் நடிக்கிறார்’ என அவர் கூறினார். தொடர்ந்து, சபாநாயகர் தனபால், நீங்க சிறுவயதில் நாடகத்தில் நடித்தீர்களா என துரைமுருகனிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த துரைமுருகன் ஆமாம்.. ’நான் நடிகனாகி இருந்திருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன்’ என்று அவர் கூறியதும் அவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.



*
மதுரை அருகே உசிலம்பட்டி தேனி சாலையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தங்கதமிழ்ச்செல்வன், இப்போதைய சூழ்நிலையில் நான் ஒரு கடைக்கண் பார்வையை காட்டினால் போதும், எடப்பாடி ரூ.100 கோடி கொடுக்க ரெடியாக இருக்கிறார். எங்களுக்கு பணம் முக்கியமில்லை, மக்களின் நலன்தான் முக்கியம் என்றார்.



*
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் 04/07/2018ல் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, சட்டசபையில் தேவையில்லாமல் நூறு பேர் உட்கார்ந்து கொண்டு மேஜையை தட்டிக்கொண்டு மேஜையை உடைக்கிறார்கள். மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது. எதிர்க்கட்சிகள் ஏதாவது பேசவேண்டும் என்று கேட்டால், அதிலும் குறிப்பாக உறுப்பினரின் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் குற்றம் சாட்டும்போது உங்களை சொல்லவில்லை என்று கூறி அதற்கு பதிலளிக்க அனுமதி மறுக்கும் சட்டசபைதான் இங்கு நடக்கிறது என்றார். 



*
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, தமிழகத்திற்கு வந்த மோடி, விதவிதமான இராணுவ விமானங்களை பறக்க விட்டார். ஆனால் எதிர்க்கட்சியினர் கறுப்பு பலூனை பறக்க விட்டனர். ’கோ பேக் மோடி’ என்றவர்கள் ’கம் பேக் மோடி’ என்று சொல்லும் காலம் விரைவில் வரும் என்றார். 


*
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன், நான் நினைத்திருந்தால் 2001-லேயே முதலமைச்சராக ஆகியிருக்கலாம் என கூறியவர். நான் புறவழியில் வர விரும்புபவன் அல்ல எனவும் 234 தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வேன். இல்லையேல் உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன் எனவும் ஆனால் பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன் என்றார்.




*
நெல்லையில் கலைஞருக்கு அஞ்சலி பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ''நான் 23 வருடங்கள் தலைவர் கலைஞருக்கு பாதுகாப்பாக இருந்துவந்தேன். இப்போது தலைவராகப்போகும் ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக இருப்பேன்'' என்றார். 

 

*
ஆகஸ்ட் 31ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, தி.மு.க.வுடன் இணைவதற்காகவே நாங்கள் போராடுகிறோம். இதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. தி.மு.க.வில் எங்களை இணைக்க தயார் என்றால், மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள நாங்களும் தயார் என்றார். 
 

*
பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றபோது, அதே விமானத்தில் வந்த இளம்பெண் சோபியா என்பவர், பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டார். இதனால் அந்த பெண்ணுடன் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த பெண் மீது புகார் அளித்தார். இதையடுத்து சோபியா மீது புதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் 290, 505 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.



*
சசிகலாவின் அக்காள் மகனும், டி.டி.வி. தினகரனின் தம்பியுமான டி.டி.வி. பாஸ்கரன் 15/09/2018ல் புதிய கட்சியை தொடங்கினார். அண்ணா எம்.ஜி.ஆர். மக்கள் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்து, மேலே காவி, நடுவில் பச்சை, கீழே கருப்பு வண்ணத்தில், நடுவில் எம்.ஜி.ஆர். படம் இருப்பதைப்போன்று கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார் பாஸ்கரன்.



*
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது கூறுகையில், என்ன வேண்டும் என்பதை கேட்டு அறிந்தோம். இயன்றதை நாங்கள் செய்ய போகின்றோம். நாங்கள் 12,500 கிராமத்தையும் தத்து எடுக்கவில்லை. எங்களால் வெற்றி பெற முடியும் என்று நினைத்து 8 கிராமத்தை மட்டும் தத்துதெடுத்து உள்ளோம். உங்கள் ஆசியும், உதவியும் இருந்தால் 12,500 கிராமத்தையும் தத்து எடுக்கும் நாளும் ஒருநாள் வரும் என்றார்.




*
சென்னை தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயலாளர்கள் ஒருமனதாக அவரை தேர்ந்தெடுத்தனர். 



 

*
சென்னை விமான நிலையத்தில் 12 நவம்பரில் செய்தியாளர்களை ரஜினி சந்தித்தார். அப்போது, பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணி உருவாக்க வேண்டும் என்று முயற்சி நடைபெறுகிறது. பாஜக அந்த அளவுக்கு ஆபத்தான கட்சியா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்படியென்று இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்ப டெஃபனிட்டா அப்படித்தானே இருக்க முடியும் என்றார். 




*
ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர்? என்ற ரஜினியின் பதில் கேள்வி குறித்து சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஏழு பேர் யார் என்று தெரியாத அளவிற்கு ரஜினிகாந்த் முட்டாள் கிடையாது.  நான் பேசியது திரித்துக்கூறப்படுகிறது. என்னைப்பொறுத்தவரைக்கும் அந்த கேள்வி தெளிவாக கேட்கப்படவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் என்று அந்த கேள்வி கேட்டப்பட்டிருந்தால் உடன் பதில் சொல்லியிருப்பேன்.  எடுத்த எடுப்பிலேயே ஏழு பேர் என்று சொன்னதால் நான் புரியாமல் எந்த எழு பேர் என்று கேட்டேன். மற்றபடி, மனிதாபிமான அடிப்படையில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். பேரறிவாளன் பரோலில் வந்தபோது நான் அவரிடம் 10 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு ஆறுதல் கூறினேன்’’ என்று விளக்கம் அளித்தார்.




*
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்காணலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது அவர், 20 தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். விஜயகாந்த் சிங்க கர்ஜனையுடன் மீண்டும் வருவார் என்று கூறினார்.

 

rajini - kamal



*
மேகதாது அணை கட்ட அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் திமுக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எந்த முகத்தை வைத்துக்கொண்டு தாமரை மலரும் தமிழ்நாட்டுல... 'புல்'லே வளரவில்லை... 'புல்'லுக்கே வக்கில்ல... தாமரை மலர்ந்துவிடுமா? என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இயற்கையாகவே மழை வரவில்லை என்றாலும் சரி  மோடியுடைய அரசு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கையாகவாவது மழையை வரவைத்து குளத்தை நிரப்பி தமிழகத்தில் தாமரையை மலர செய்வோம். தாமரை மலர்ந்தே தீரும் என கூறினார். 

அதற்கு ஸ்டாலின் டூவிட்டர் பதிவில் ''சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்'' ''தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரியசக்தி நினைத்தால் தாமரையும் கருகும்'' என பதிவிட்டார்.


*
ஐந்து மாநில தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மோடி அலை ஓயவே ஓயாது. எந்த காலத்திலும் மோடி அலையை ஓயவைக்க முடியாது. மோடி அலையை ஓயவைக்க பெரிய தலை எதுவும் இல்லை. வெற்றி வந்தால் துள்ளுவதும் இல்லை; தோல்வி வந்தால் துவண்டுபோவதும் இல்லை என்றார்.  




*
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஷ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது". என பதிவிட்டிருந்தார். 




*
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருவண்ணக்கொடியை ஏற்றினார். இரும்பிலாலான இந்த கொடிக்கம்பம் 2430 கிலோ எடை கொண்டது. 114 அடி உயரக் கொடிகம்பமான இது கோட்டை கொத்தளத்தில் உள்ள தேசியக் கொடிக் கம்பத்தைவிட உயரமானது. இந்தியாவிலேயே அரசியல் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள உயரமான கொடி கம்பம் திமுகவினுடையது என்ற பெருமையையும் பெருகிறது.



*
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வுக்கு எப்போதும் ஒரே நிலைப்பாடு தான் உள்ளது. சமீபத்தில் அ.ம.மு.க.வில் இருந்து வந்தவர்கள் எனது முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க.வில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. வருங்காலங்களிலும் அ.ம.மு.க.வில் இருந்து வருபவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். தினகரனை தவிர அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் என தெரிவித்தார். 

 

vaiko-thirumavalavan




*

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மதிமுக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாயின. 

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் டிச.11ல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

வைகோ கூறும்போது, ‘‘திருமாவளவன் எனது தம்பி. நானும் அவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை. எந்த நிலையிலும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதில் பிளவு ஏற்படாது. வருகிற இடைத்தேர்தலில் தி.மு.க. தான் வெற்றிபெறும்’’ என்றார்.

தொல்.திருமாவளவன் கூறுகையில், ‘எங்கள் இருவரிடையே எந்த பிரச்சினையும் இல்லை. அண்ணன் வைகோவுடன் 30 ஆண்டுகாலமாக நட்பில் இருந்துவருகிறேன். நினைத்ததை ஒளிவுமறைவின்றி பேசக்கூடியவர். ராகுல்காந்தியிடம் மோடி திணறி வருகிறார்’ என்றார்.

 




*
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 



*
செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது குறித்து தினகரன் கூறுகையில், சகோதரர் செந்தில் பாலாஜியை 2006ல் இருந்தே தெரியும். செந்தில் பாலாஜி போனதில் வருத்தமில்லை. எங்கிருந்தாலும் வாழ்க. சொந்த பிரச்சனை இருப்பதாக கூறி 4 மாதங்களுக்கு முன்பு கூறினார். அதனால் கட்சியில் ஆக்டிவாக இருக்க மாட்டேன் என்றார். கட்சியில் இருப்பதும், விலகுவதும் அவரவர் விருப்பம் என்றார்.


*

நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியாவின் வளமை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. 4½ லட்சம் மக்கள் தொகை கொண்ட மாலத்தீவுக்கு ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு அள்ளி கொடுக்கிறது. சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. கஜா புயல் பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு முழு மையாக வழங்க மறுக்கிறது.

 

தமிழர்களின் வரி வேண்டும். ஆனால் அவர்களின் வாழ்க்கை குறித்து கவலையில்லை. தமிழர்களின் ஓட்டு வேண்டும். ஆனால் அவர்களின் உயிர் குறித்து கவலையில்லை என்ற நிலைப்பாட்டை தான் மத்திய அரசு கொண்டுள்ளது.
 

கஜா புயல் பாதிப்பில் ஆறுதல் கூறக்கூட பிரதமர் மோடி வரவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வாக்குகள் கேட்டு வர இருப்பது தமிழர்களை அவமதிக்கும் செயல். மோடிக்கு கருப்புக்கொடி காட்டி, கருப்பு கொடியின் பெருமையை சிதைக்க நாங்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்துவோம் என்றார். 
 

 

*
விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மத்திய அரசு இதுவரை கஜா புயல் நிவாரணம் வழங்கவில்லை. இது மிகப்பெரிய பேரிடர். ஆனால் இதுவரை மத்திய அரசு பேரிடராக அறிவிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. வடக்கே இருப்பவன்தான் வாழ வேண்டும், தெற்கே இருப்பவன் சாக வேண்டும் என்று எண்ணுகிறார்களோ என்ற நிலைப்பாடுதான் எங்களைப்போன்றவர்களுக்கு வருகிறது என்றார். 
 

PMK anbumai




*
மதுரை ஆவின் தலைவராக ஓ.ராஜா, டிச.19-ம் தேதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். 




*
இந்த நிலையில் நீக்கப்பட்ட ஐந்து நாட்களில் மீண்டும் அவர் கட்சியில் இணைக்கப்பட்டார். நேரிலும், கடிதம் மூலமும் வருத்தம் தெரிவித்ததால் கட்சியில் ஓ.ராஜா இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளனர். 

 

bjp



*

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு & நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல், கூட்டணி குறித்து முடிவெடுக்க எனக்கு முழு அதிகாரத்தை செயற்குழு உறுப்பினர்கள் வழங்கியதாக தெரிவித்தார். கூட்டணிப் பற்றிய கேள்விக்கு, தமிழகத்தின் மரபணுவை மாற்றத்துடிக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று தெரிவித்தார். 



*

கோவையில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு தீர்மானிக்கிறது என்றும், கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு வழங்குகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 

 

 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்