திருப்பூரில், சாலையில் செல்லும் போதெல்லாம் பார்த்து குரைத்ததால் 15க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டதாக மீன் வியாபாரி ஒருவர் மீது அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
திருப்பூர் கொங்கணகிரி இரண்டாம் வீதியைச் சேர்ந்த கோபால் என்பவர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் உள்ள மீன்களை பிடித்து அப்பகுதியில் உள்ள மீன் கடைகளுக்கு வினியோகித்து வரும் தொழில் செய்து வந்துள்ளார். இரவு நேரங்களில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள் தினம்தோறும் கோபாலை பார்த்து குரைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் கொண்ட கோபால் 15க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு விஷம் வைத்து கொன்று விட்டதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 13ம் தேதி மீன்பிடித்து விட்டு வீடு திரும்பும் போது மீன் இறைச்சியில் விஷம் கலந்து தயாராக எடுத்து கொண்டுவந்த கோபால் அதை தெருநாய்களுக்கு சாப்பிட வைத்ததாகவும், விஷம் கலந்த மீன் இறைச்சியை சாப்பிட 15க்கும் மேற்பட்ட நாய்கள் மயங்கி விழுந்து துடிதுடித்து பரிதாபமாக இருந்ததாகவும் கூறி சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.,
அந்த காட்சியில் இருசக்கர வாகனத்தில் வரும் கோபால் கையில் வைத்துள்ள விஷம் கலந்த உணவை தன்னை நோக்கி குரைக்கும் நாய்க்கு தூக்கி எறிகிறார். அதை சாப்பிட்ட அந்த நாயானது சில நிமிடங்களிலேயே தடுமாறி அதே இடத்திலேயே விழுந்து இறந்து விடுகிறது.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.