ஞானச்செருக்கு... உலகத்திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரையுலகின் பெருமையை பேசிக்கொண்டிருக்கும் அடுத்த திரைப்படம். மறைந்த ஓவியர் வீரசந்தானம், முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன். படம் குறித்தும் படம் சார்ந்த பிற விசயங்கள் குறித்தும் நம்மிடம் அவர் பகிர்ந்தது...
”12 ஜுலை 2017 இரவு சுமார் 8 மணி அளவில் ’ஞானச்செருக்கு’ பட வேலையாக ஓவியர் வீரசந்தானத்தை சந்தித்தேன். படத்திற்கான பாடல் மெட்டுகளை இசையமைப்பாளர் அனுப்பியிருந்தார். அதை காட்டினேன். படுக்கையில் சாய்ந்தவாறு சிறிது நேரம் கேட்டுக்கொண்டிருந்தார். நிசப்தமான அறையில் மெட்டு மட்டும் இசைத்துக் கொண்டிருந்தது. நான் கிளம்பும் சமயத்தில் வீர சந்தானம், ’படத்தை தனியாக இவ்வளவு தூரம் நகர்த்தி கொண்டு வந்ததே சாதனைதான், படத்தை விரைவாக முழுமையாகப் பார்க்க வேண்டும்’ என்றார். நான் ’ஒரு மூன்று மாதத்தில் முடித்து விடுவேன்’ என்றேன். ’படம் பேசப்பட வேண்டும், பேசப்படுமா?’ என்றார். ’முதலில் படத்தை முடித்து விடுகிறேன்’ என்றேன். சிறு புன்னகையுடன் ’படம் நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும், அதா நா இருக்கேனே, பார்த்துக் கொள்வோம்’ என்றார்.
13 ஜுலை இரவு சுமார் 7 மணி அளவில் ஓவியர் வீரசந்தானம் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அந்த அறையில் ஒலித்த மெட்டும் அவர் இறுதியாக சொன்ன வார்த்தைகளும் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தன. தமிழகத்தில் வீர சந்தானத்தை அறிந்தவர்கள் மிகவும் சொற்பம். அவரின் கலை தேடலும், தமிழ் உணர்வும், களப்போராட்டங்களும், ஈழ விடுதலை முன்னெடுப்புகளும் வெளியில் மறைக்கப்பட்ட ஒன்று. சந்தானத்தின் புறம் இன்று இல்லை. அவரின் நம்பிக்கைகளும், உணர்வுகளும் இன்னும் உயிர்ப்புடன் உலவிக் கொண்டுதானிருக்கின்றன. அவர் மறைவுக்குப் பின்னர் படக்குழு முற்றாகத் தளர்ந்து விட்டது. இயல்பு நிலைக்கு கொண்டு வந்து படத்தை நிறைவு செய்ய ஒன்றரை ஆண்டு தேவைப்பட்டது. அவரின் இறுதி சிந்தனைகளுள் ஒன்றாக ’ஞானச்செருக்கு’ படம் பற்றிய எதிர்பார்ப்பும் இருந்திருக்கும். அவர் ஒரு நல்ல தகுதியான படத்தில்தான் நடித்தார் என வலுவாக நம்பினார்.
மக்கள் மத்தியில் படத்தை கொண்டு வர வேண்டும் என திட்டமிட்டிருந்தார். அவர் மறைவுக்குப் பின் எனக்கான சுமை அதிகரித்தது. அவர் அடையாளத்தை சிதைக்காதபடி படத்தை வெற்றிகரமாக வெளிக்கொண்டு வர வேண்டும். 2019 ஜனவரி படம் நிறைவடைந்தது. முழுக்க வணிகத்தை நோக்கி தமிழ் சினிமா மாறிவிட்ட நிலையில் கலை சினிமாக்கள் மழைக்குப் பின் வரும் வானவில் போல் தோன்றுகிறது. இங்கு மழையே அரிதாகிவிட்ட நிலையில் வானவில்லை கவனிப்பார் யார்?
’ஞானச்செருக்’கை கவனம் பெற செய்ய வேண்டும். அதன் தகுதியை நிரூபிக்க வேண்டும். வணிகரீதியாக அதை வெளி கொண்டு வரும் முன் உலக சினிமாவாக அதை அடையாளப்படுத்த வேண்டும். ஞானச்செருக்கு தகுதியான படைப்பாக இருக்கும் பச்சத்தில் அதுவே தன்னை நிரூபித்துக் கொள்ளட்டும் என எண்ணினேன். உலகத் திரைப்பட விழாவிற்கு போட்டிக்காக அனுப்பினேன். ஏறக்குறை 8 மாதங்கள் உலகம் முழுக்க பயணித்தது. இதுவரை 7 சர்வதேச விருதுகளையும், 30 மேற்பட்ட சிறந்த படத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இன்று ஞானச்செருக்கு மக்கள் மத்தியில் பேச படுகின்ற படம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. ஞானச்செருக்கு ஒரு கலைஞனின் எழுச்சியை பேசும். வாழ்வதற்கான நம்பிக்கையை அள்ளிக்கொடுக்கும். இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட துவக்கத்தில் படத்தை தமிழகத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளேன். ஓவியர் வீரசந்தானம் மீண்டும் வருவார். நன்றி”.