நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. டெல்லியில் செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தது. அதேபோல தமிழகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக அவர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். அதனைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், '' 'தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்திட வாரீர்' என்ற தேசியக்கவி பாரதியின் பாடல் வரிகளை பாடும் தகுதியை நமக்குத் தந்த இந்திய நாட்டு விடுதலை வீரர்கள் அத்தனை பேரையும் வணங்கி என் உரையை தொடங்குகிறேன். ரத்தத்தையே வேர்வையாக தந்து தங்கள் உடலையே விடுதலை உலைக்கு கொடுத்த எண்ணற்ற தியாகிகள் இந்திய மண்ணில் உண்டு. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் உண்டு. இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெளிநாடுகளில் உதவியை பெற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை நடத்திய போது கரம் கோர்த்தவர்கள் தமிழ்நாட்டு வீரர்கள்.
விடுதலையை அடைய கால நிர்ணயம் இல்லை என்று தெரிந்தும் உயிரையே மாவீரர்கள் கொடுத்த மண் இந்த தமிழ் மண். அறவழியில் எதிரிகளை பணிய வைத்த காந்தியடிகளின் பின்னால் முழு மனதோடு இந்தியா அணிவகுத்து இருந்தது. அதிலும் தமிழ்நாடு முழுமையாக கைகோர்த்து நின்றது. 'கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்' என்று நாமக்கல் கவிஞர் பாடிய பாடல் வரிகளுக்கு ஏற்ப சத்திய பாதையில் எத்தனையோ சோதனைகள் வந்தாலும் அணிவகுத்தவர்கள் தமிழ்நாட்டு தியாகிகள்.
இவர்களின் தியாகத்தால் தான் 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் விடுதலை காற்றை சுவைத்தோம். நமக்கான நாடு நமது என உணர்ந்தோம். நினைத்துப் பாருங்கள் 77 ஆண்டுகளை கடந்து விட்டது விடுதலை இந்தியா. தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவை நாம் உருவாக்கி வளர்த்து வருகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி இவற்றில் ஒன்றுபட்ட நாட்டின் வலிமையை நாட்டின் வலிமையாக உலகிற்கு காட்டி வருகிறோம்.
ஒரு வண்ணம் அல்ல நமது கொடி. அது மூவர்ணக் கொடி. நமது பன்முகத்தன்மையின் அடையாளம். இந்த கொடி விடுதலை நாள் என்பது அரசியல் விடுதலை நாளாக மட்டுமல்லாமல் பண்பாட்டு விழாவாக ஒட்டுமொத்த இந்திய மக்களால் கொண்டாடப்படுகிறது'' என்றார்.
தொடர்ந்து பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். 'சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் 20,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 11,000 ரூபாயில் இருந்து 11,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 2026 ஜனவரி மாதத்திற்குள் சுமார் 75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்; நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதி நுட்ப நகரம்; எறையூரில் தொழில் பூங்கா; திருச்சி மற்றும் மதுரையில் புதிய டைட்டில் பூங்காக்கள்; விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மினி டைட்டில் பூங்காக்கள்; ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய வசதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஒரு புதிய பன்னாட்டு விமான நிலையம்; திருவள்ளூர் மாவட்டத்தில் 182 ஏக்கர் நிலப்பரப்பில் 1428 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா; கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 300 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா; தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இயங்கும் இஸ்ரோ விண்வெளி நிலையத்திற்கு அருகில் ஒரு விண்வெளி தொழில் பூங்கா மற்றும் திட எரிபொருள் பூங்கா ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன' என்றார்.
அதனை தொடர்ந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.