கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது விஜயங்குப்பம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். பெயிண்டர் வேலை செய்து வரும் இவர் கிராம ஊராட்சியில் கட்டிடங்கள் பராமரிப்பின்மை, பொதுமக்கள் பிரச்சனைகள், அரசு திட்டங்களைக் கிராமங்களில் முறையாகச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தீவிரமாக இயங்கியவர். மேலும், ஊர் இளைஞர்களுடன் ஒன்று சேர்ந்து அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுப்பது, தீர்க்கப்படாத பிரச்சனைகளை, தீர்த்து வைக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துவது என ஊர் மக்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களுக்காக முன்னின்று செயலாற்றியவர்.
இந்தநிலையில் இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருடன் ஒரு பைக்கில் உளுந்தூர்பேட்டைக்கு வந்துள்ளார். ஊர் பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்கள் பற்றி வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்துப் புகார் மனு தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார். பிறகு இரவு மீண்டும் பைக்கில் தங்களது ஊருக்குச் சென்றுள்ளனர் பாண்டியன் மணிகண்டன் ஆகிய இருவரும்.
அப்போது தேசிய நெடுஞ்சாலையில்உள்ள நகர் ரயில்வே மேம்பாலம் அருகே பைக் செல்லும்போது வாகன விபத்தில் சிக்கி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற பாண்டியன் காயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மணிகண்டன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மணிகண்டன் மனைவி, தனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் பொதுநலச் சேவைகள் செய்யும்போது பலர் அவர் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்ததாகவும், எனவே அவரது சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் மணிகண்டன் விபத்தில் இறந்தாரா? அல்லது வேறு யாரேனும் விபத்து போல் செய்து அவரை கொலை செய்தனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.