சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து, தமிழக சிபிசிஐடி காவல் துறையினர், ஆந்திரா மாநில காவல்துறை உதவியை கோரியுள்ளனர். முகிலன் ஆந்திராவில் தான் இருக்கிறதா? என்பதை விசாரித்து தெரிவிக்கும் படி ஆந்திர மாநில காவல்துறையை தமிழக காவல் துறை கேட்டு கொண்டுள்ளது. முகிலனை பார்த்ததாக கூறிய சண்முகம் தான் திருப்பதியில் உள்ள ரயில் நிலையத்தில் முதல் மேடையில் முகிலனை ஆந்திர காவல் துறையினர் அழைத்து சென்றதாகவும், ஆனால் தான் பயணித்த ரயில் புறப்பட்டதால் அவரிடம் பேச இயலவில்லை என தெரிவித்தார்.
சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதி ரயில்வே காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் முகிலன் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்காதே என முழக்கமிட்டவாறு செல்கிறார். மேலும் அந்த வீடியோவில் தாடியுடன் முகிலன் உள்ளார். இது தொடர்பாக தமிழக சிபிசிஐடி மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் விரைவில் ஆந்திர மாநிலம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.