'மின் இணைப்புடன் ஆதார் கார்டு இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காது' என்பது தவறான தகவல் என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நாளை மீண்டும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைய இருக்கும் நிலையில், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ''வரும் நாட்களில் மழை பாதிப்பு அதிகம் இருந்தாலும் மின் வழங்கல் சீராக இருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும் என்று பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது. ஒருவர் மூன்று இணைப்பு வைத்திருந்தாலும், ஐந்து இணைப்பு வைத்திருந்தாலும் ஆதார் இணைத்துவிட்டால் நூறு யூனிட் மட்டும்தான் இலவசமாகக் கிடைக்கும் என்றும் மீதியெல்லாம் பில் வந்து விடும் என்றும் பரவி வரும் தகவல் பொய்யானது.
பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் மட்டத்தில் முதலில் விழிப்புடன் இருக்க வேண்டும். இதில் முதலில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். ஆதார் இணைக்கப்படுவதற்குக் காரணம் எவ்வளவு இணைப்பு? யார் யார் பெயரில் இணைப்பு இருக்கிறது? எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது? என்பதற்கான எந்த டேட்டாசும் நம்மிடம் கிடையாது. அரசு பொறுப்பேற்ற பொழுது மொத்தமாக ஒரு கோடியே 15 லட்சம் இணைப்புகளுக்கான தரவுகள்தான் இருந்தது. அது இப்பொழுது மூன்று கோடி இணைப்புகளை நெருங்கி தரவுகளை வாங்கி இருக்கிறோம். எவ்வளவு உற்பத்தி செய்கிறோம்? எவ்வளவு கொள்முதல் செய்கிறோம்? எவ்வளவு பில்லிங் செய்கிறோம் என்பதை எடுக்க வேண்டும் அதற்காகத்தான் இணைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறோம். இதனால் எந்த விதமான அச்சமும் தேவையில்லை'' என்றார்.