Skip to main content

“7 மாதம் பொறுத்தவங்களால 3 நாள் பொறுக்க முடியாதா?” - பதவியேற்பு குறித்து எம்.எல்.ஏ கேள்வி

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

Why swearing-in ceremony Madras High Court Judge taking place before  arrival CM stalin

 

“உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவை வெளிநாட்டில் இருந்து முதலமைச்சர் வந்த பிறகு நடத்தி இருக்கலாம்” என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ தெரிவித்திருக்கிறார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை 28.05.2023 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியாக நீதி அரசர் சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா பதவி ஏற்பு நடக்கின்றது. இன்னும் மூன்று நாட்களில் தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்து சென்னை திரும்புகிறார். மூன்று நாட்கள் கழித்து பதவியேற்பு விழாவை ஏற்பாடு செய்து முதலமைச்சர் கலந்துகொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். திடீரென்று முதலமைச்சர் சென்னையில் இல்லாதபோது தேதி அறிவிக்கப்பட்டு பதவியேற்பு விழா நடத்தப்படுவது தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.

 

கடந்த ஏழு மாதங்களாக நீதி அரசர் திரு ராஜா அவர்கள் பொறுப்பு நீதிபதியாக பணியாற்றினார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் பதவி ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து நீதி அரசர் வைத்தியநாதன் அவர்கள் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 7 மாதங்கள் பொறுப்பு நீதிபதியின் கீழ் இயங்கிய சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் மூன்று நாட்கள் அதேபோல இயங்கி இருந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டிருப்பார். 

 

தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர், ஆளுநர், தலைமை நீதிபதி ஆகிய மூன்று பதவிகளும் ஒரு மாநிலத்தின் முக்கியப் பதவிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நீதிமன்றங்களுடைய அனைத்து மேம்பாட்டு பணிகளுக்கும் பராமரிப்புகளுக்கும் தேவையான நிதியை தமிழ்நாடு அரசுதான் ஒதுக்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவசர பதவி ஏற்பு நிகழ்ச்சி உள்நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொண்டு திட்டமிட்டு இந்த ஏற்பாடுகளை செய்திருந்தால் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் இடையிலான பரஸ்பர உறவு சுமூகமாக இருப்பதற்கு வழி வகுத்திருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்