ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 4 மாடி அடுக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் சுற்றி செடி, கொடிகள் நிறைந்து காணப்படுவதால் சில நேரங்களில் விஷ உயிரினங்கள் வருவதால் ஆட்சியர் அலுவலகத்தில் வரக்கூடிய பொதுமக்கள் பீதி அடைகின்றனர்.
இந்நிலையில் சென்னையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சொகுசு கார் ஒன்று அங்கு நின்றது. அதிலிருந்து நல்ல பாம்பு வெளியேறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கிருந்து பாம்பை அப்புறப்படுத்த முயன்றபோது பாம்பு படமெடுத்து போக்கு காட்டியதால் அங்கிருந்த இளைஞர்கள் கூட அஞ்சினர்.
அப்போது அருகில் இருந்த இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்தது. உடனடியாகத் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலாஜி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனத்தைப் படுக்க வைத்து ஜெயின் ப்ராக்கெட்டில் புகுந்திருந்த நல்ல பாம்பை ஃபேர்பாக்ஸால் கழற்றி லாவகமாக பாம்பை பிடித்தனர். பிடிபட்ட நல்ல பாம்பை அம்மூர் வனப்பகுதியில் விட்டனர்.