
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஞானசுந்தரி(70). இவர் தற்போது என்.ஐ.டி பகுதியில் உள்ள ரெட்டியார் தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அவருடைய செல்போன் எண்ணிற்கு பான் கார்டு இணைக்க வேண்டும் என்று ஒரு குருஞ்செய்தி வந்துள்ளது. அதனை தொட்டவுடன் அது எஸ்.பி.ஐ யோனோ என்ற செயலியின் பக்கத்திற்குள் நுழைந்துள்ளது. அவரும் தொடர்ந்து திரையில் கேட்கப்பட்ட எல்லாவற்றை பதிவு செய்துள்ளார். உடனடியாக அவருக்கு ஓ.டி.பி வந்துள்ளது. இதையடுத்து வீட்டிற்கு அருகில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்று பார்த்தபோது, அவருடைய வங்கி கணக்கில் இருந்து 7 லட்சத்து 74ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து மாவட்ட சைபர் க்ரைமிற்கு இணையதளம் மூலம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.