விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை தலைமையிலான போலீசார் 16/07/2019 செவ்வாய் அன்று இரவு 10 மணியளவில் சேலம் - விருத்தாசலம் சாலையில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.
அந்த வழியாக வந்த சிலர் கொடுத்த தகவலின் பேரில், செம்பாகுறிச்சி பகுதிக்கு சென்றனர். அங்கு சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் டயரில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. காரின் கண்ணாடிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது காரின் நடுவில் சாக்குமூட்டை ஒன்று கட்டப்பட்ட நிலையில் இருந்தது.
![neyveli car](http://image.nakkheeran.in/cdn/farfuture/M1Ml_zTaL_NpL3JV0EnsHenKaDfXLsSFtFhuomHEhdI/1563343274/sites/default/files/inline-images/neyveli%20car.jpg)
அதனை பிரித்து பார்த்தபோது, ஆண் பிணம் ஒன்று இருந்தது. அவரது தலையில் பலத்த ஆயுதங்களால் தாக்கிய காயங்கள் இருந்தது. பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தினர். கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த என்.எல்.சி. ஊழியர் பழனிவேல் (வயது 52) என்பது தெரியவந்தது. இவரது மனைவி அஞ்சலை (45) என்பது தெரிய வந்தது.
என்.எல்.சி. ஊழியரை அடித்து கொலை செய்து சாக்குமூட்டையில் பிணத்தை கட்டி எரிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்தது எப்படி? கொலை செய்தது யார்? உடந்தையாக இருந்தது யார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.