Skip to main content

சின்னத்திரை காமெடி நடிகரின் கால் உடைப்பு; மனைவி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

Small screen comedy actor breaks his leg; BJP officials including wife arrested

 

சின்னத்திரை காமெடி நடிகரின் மனைவி பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்து கொண்டு கணவரின் காலை தாக்கி உடைத்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

'அசத்தப்போவது யாரு' மற்றும் 'கலக்கப்போவது யாரு' உள்ளிட்ட சின்னத்திரை நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் வெங்கடேசன். மதுரை சேர்ந்த இவர் மதுரையில் விளம்பர ஏஜென்சி ஒன்றை வைத்து விளம்பர படங்கள் எடுப்பது மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நடனம் ஆடுவது, அரசியல் கருத்துக்களை தெரிவிப்பது போன்றவற்றையும் செய்து வந்தார்.

 

அண்மையில் பிரதமர் மோடி குறித்தும், அமித்ஷா குறித்தும் பல்வேறு எதிர் கருத்துக்களை வைத்திருந்தார். இந்தநிலையில் பாஜக நிர்வாகிகள் சிலர் அவரது வீட்டுக்கே சென்று இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். அதேநேரம் வெங்கடேசனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது அவருடைய மனைவி பானுமதிக்கு தெரிய வந்து கண்டித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து மனைவி பானுமதியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வெங்கடேசன் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருப்பினும் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

 

இந்நிலையில் வீட்டில் ஓட்டுனராக பணியாற்றும் மோகன் என்பவரிடம் சொல்லி  வெங்கடேசனின் காலை உடைக்க பானுமதி திட்டமிட்டார். இதற்காக ராஜ்குமார் என்பவரை மோகன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதற்காக ஒரு லட்சம் ரூபாயை ராஜ்குமார் கேட்டுள்ளார். அதனால் அந்த திட்டத்தை விட்ட பானுமதி, தனது உறவினரான பாஜகவை சேர்ந்த வைரமுத்து என்பவரை தொடர்பு கொண்டு கணவரின் நடத்தை குறித்து தெரிவித்துள்ளார். இதனால் வெங்கடேசன் மீது கோபத்தில் இருந்து வைரமுத்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி இரவுதாக்குவதற்கு திட்டம் தீட்டினர். வைரமுத்து, மலை சாமி, அனந்தராஜ் உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து வெங்கடேசனை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் வெங்கடேசனின் இரு கால்களும் உடைந்தது. சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் தல்லாகுளம் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். வெங்கடேசனின் அலறல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து வெங்கடேசன் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது மனைவி பானுமதி, ராஜ்குமார், மோகன், வைரமுத்து, அனந்தராஜ், மலைசாமி ஆகிய ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்