என்எல்சியில் சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க திட்டம்தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தகவலை என்.எல்.சி தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறிய வகை அணு உலைகள் மூலம் 300 மெகாவாட்டுக்கும் குறைவான மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாகவும், 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வு இலக்கை எட்ட சிறிய அளவிலான அணு உலைகள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் என்எல்சி-ன் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி கடலூர் பகுதியில் என்எல்சிக்கு நிலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக தான். ஆனால் அந்த பகுதியில் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறு அணு உலைகளை அமைப்போம் என்று சொல்வது மக்களுக்கு விரோதமானது. அணு உலையில் இருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாளக்கூடிய தொழில்நுட்பம் எந்த நாட்டிலும் கிடையாது. அப்படி சிறிய அணு உலைகள் அமைக்கப்பட்டால் அதன் கழிவுகளை என்ன செய்யப் போகிறார்கள். அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் எப்படி தடுக்கப்படும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. தமிழக அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தது எதற்காகவோ அந்த பயன்பாட்டிற்கு மட்டும் அதனை பயன்படுத்த வேண்டும். நினைத்தபடி எல்லாம் மாற்றிக் கொள்ளும் எந்த உரிமையும் என்எல்சி நிர்வாகத்திற்கு கிடையாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க இருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.