திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பல ஆண்களை மேட்ரிமோனியல் மூலம் மோசடி செய்தது தொடர்பான வழக்கில் கைதான நடிகை சுருதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மேட்ரிமோனியல் மோசடி வழக்கை வலிமையாக்க என்னை பற்றியும், என் தாய் மற்றும் குடும்பம் பற்றியும் தவறாக அருவருக்கத்தக்க கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுகிறது எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
நான் என் தாய்க்கு பிறக்கவில்லை, நாங்கள் குடும்பம் இல்லை, கும்பல் என தவறாக கருத்துக்கள் பரப்பப்படுகிறது. என்னால் சாதாரண இயல்பான வாழ்க்கையை முன்னெடுக்க முடியவில்லை. நானும் உங்கள் வீட்டில் உள்ள பெண் போன்றவர்தான். இந்த வழக்கிலிருந்து மீள முடியவில்லை. சமூகவலைத்தளங்களில் என் தொடர்பாக பரப்பப்படும் அவதூறு கருத்துகள் குறித்து உயர் நீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையம், பிரதமர் ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளேன்.
என் மீதான மோசடி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நாளை எண்ணி கார்த்திருக்கிறேன். அந்த ஒரு இடத்தில் தான் நான் குற்றமற்றவள் என சொல்ல முடியும். சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்கள் பதிவிடுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு கோவை சைபர் கிரைம் முன் ஆஜரானேன். அவர்களிடம் என் புகார் தொடர்பான ஆவணங்களை சமர்பித்துள்ளேன். இதுபோன்ற கருத்துக்கள் பதிவிட்டு வருவதால் என் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார் எனக் கூறினார்.