சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபடி, அரியானூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
வெளிமாநில மாணவ, மாணவிகள் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்துத் தங்கி, கல்லூரிக்குச் சென்று வருகின்றனர். இந்த கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல், போதைப் பொருள்களை விற்பனை செய்து வருவதாக சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளர் சரவணன், எஸ்.ஐ சக்தி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணையில் இறங்கினர்.
கேரளாவைச் சேர்ந்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் சின்ன சீரகாபாடியில் தங்கியிருந்து 'மெத்தாம்பேட்டமைன்' (Methamphetamine) என்ற போதைப் பொருளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அந்த வீட்டைச் சுற்றி வளைத்த காவல்துறையினர், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஆலன் கே பிலிப் (23), அதே பகுதியைச் சேர்ந்த அமல் (20), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சித்தாரப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் (22) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இவர்களில் அமல், பிஇ, 2ம் ஆண்டும், விக்னேஷ்குமார் பிஇ, இறுதியாண்டும் படித்து வருவதும் தெரிய வந்தது. மூவரிடமும் விசாரணை நடத்தியதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
பெங்களூருவில் இருந்து மெத்தாம்பேட்டமைன் போதை மருந்தை ஒரு கிராம் 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்து, சேலம் கல்லூரி மாணவர்களிடம் 5000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளனர். கண்ணாடி இழை போன்ற ஒரு கிராம் மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருளை கைகளில் கசக்கிப் பயன்படுத்தினால், ஒரு வாரம் வரை போதை இருக்கும் என்கிறார்கள்.
கைதான மூன்று பேரும் ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களைத் தேடி வருகின்றனர். பெங்களூருவிலிருந்து செயல்படும் போதை சப்ளை கும்பலைக் கூண்டோடு பிடிக்கவும் சேலம் மாவட்டக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.