திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இன்று (26/03/2022) நடந்த பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சியாமளா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பட்டிவீரன்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தி.மு.க. தனி பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருந்த நிலையில் தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா தேவி பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதனிடையே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கல்பனா தேவி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் காலியான தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று (26/03/2022) பட்டிவீரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கானத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சியாமளா வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், தி.மு.க. கவுன்சிலர்களின் ஆதரவோடு போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், நடைபெற்ற துணைத் தலைவர் பதவிக்கானத் தேர்தலில் ஏற்கனவே தலைவர் பதவியை ராஜினாமா செய்த கல்பனா தேவி போட்டியிட்டிருந்த நிலையில், அவர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தி.மு.க.வின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ.வைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.