மணச்சநல்லூர் அருகே திருப்பஞ்சலி, ஈச்சம்பட்டியில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது நடந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தினர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் தீ குண்டத்தில் இறங்கிய மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குருவம்பட்டி, ஈச்சம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த ஆறு பேர் தவறி விழுந்தனர். இதில் 6 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அங்கிருந்த படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மணச்சநல்லூர் காவல் துறையினர் ஈச்சம்பட்டி கிராமத்திற்குச் சென்று நேரடியாக விசாரணை நடத்தி ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து விழாக்களில் இதுபோன்று அசம்பாவிதங்கள் ஏற்படாதபடி விழா நடத்த வேண்டும் என்று எச்சரித்து அனுப்பியுள்ளனர். மேலும் காவல்துறையிடம் முன் அனுமதி பெறாமல் நடைபெறும் விழாக்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் யார் பொறுப்பு ஏற்பது என்றும், இனிமேல் அனுமதி பெற்று விழா நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.