தமிழகத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, இஞ்சி, பூண்டு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுவதாகவும், விருதுநகர் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், திமுக அரசைக் கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியபோது, “அதிமுக இருக்குமா? கலைந்துவிடுமா? என்று பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில், கழகத்தை எஃகு கோட்டையாக உருவாக்கி, ஒருமித்தக் குரலோடு பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றைக்கு பாரத பிரதமர் நரேந்திரமோடியின் அருகில் உட்காரும் அளவுக்கு, இயக்கத்தை வளர்த்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர்களின் உத்தரவிற்கு இணங்க இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகள் உள்ளிட்ட 520க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து கவர்ச்சியாகப் பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, இன்று வரையில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அந்தர் பல்டி அடித்து திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாக வெற்று தம்பட்டம் அடித்துக்கொண்டு விளம்பரங்களின் மூலமும் மக்களை ஏமாற்றி வருகிறது. விடியா திமுக ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று வெற்று தம்பட்டம் அடித்துவிட்டு எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறார். திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களை ஏமாற்றும் விதமாக ஒவ்வொரு நாளும் அரசு நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தும் வகையில் முதலமைச்சரின் பேச்சை ஃபோட்டோ சூட் நடத்துவது போல் செய்துவிட்டு மக்களை ஏமாற்றி வருகிறார்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இபிஎஸ் ஆட்சிக் காலத்தில் மக்கள் நலனை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடுவிழா கண்டு வருவதோடு கழக ஆட்சியிலே எடப்பாடி ஆட்சியிலே கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், தனது அப்பா படத்துடன் ஸ்டிக்கர் ஒட்டி, ஏதோ தாங்கள் கொண்டு வந்த திட்டம் போல் தம்பட்டம் அடித்துக்கொண்டு செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். டாஸ்மாக் மற்றும் மின்சார துறைகளில் கொள்ளையடித்த திமுக மந்திரி செந்தில் பாலாஜி, சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட போது, நாடகம் ஒன்றை நடத்தி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் உட்பட சக அமைச்சர்களும் சட்டத்தை மீறி இரவு பகலாக மருத்துவமனைச் சென்று அவரைப் பார்த்த நிகழ்வுகளை தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் மக்கள் கண்கூடாகப் பார்த்து வெறுப்படைந்துள்ளனர்.
மறைந்த கலைஞர் ஆட்சிக் காலத்தின் போது அமைச்சராக இருந்த ஆலடி அருணா, என்.கே.கே.பி. ராஜா ஆகியோர் மீது குற்ற வழக்கு வந்தபோது கலைஞரால் அவர்கள் இருவரும் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்காமல் துறையற்ற அமைச்சராக வைத்திருப்பது, அவரை அமலாக்கத்துறையினர் விசாரிக்க விடாமல் பாதுகாத்து திமுக ஆட்சியை காப்பாற்றுவதற்காக தான் துடிக்கிறார் என மக்கள் எண்ணுகிறார்கள் பேசுகிறார்கள்.
அதிமுக சார்பில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் வாயிலாக திமுக அரசுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், சாமானிய மக்களும் நடுத்தர மக்களும் கடுமையான உணவுப் பொருள் விலைவாசி உயர்வால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பேசினார்.