மிக்ஜாம் புயல் ஓய்ந்திருக்கும் நிலையில் சென்னையில் சில இடங்களில் இன்னும் நீர் வடியாத நிலை உள்ளது. இன்று முதல் எட்டாம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் டிசம்பர் 9ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சில இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் தாலுகாவில் வழக்கம் போல நாளை கல்வி நிறுவனங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேபோல் செங்கல்பட்டில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய ஆறு தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டும் பள்ளி அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநிலம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 7, 8 தேதிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வின் முதல் இரண்டு தேர்வுகள் டிசம்பர் 14, 20 ஆம் தேதிகளில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.