ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி என மூன்று வாய்க்கால்களில் விவசாயம், கால்நடை மற்றும் குடிநீர் தேவைகளுக்காக முறை வைத்து நீர் திறந்து விடுவது வழக்கம். இதில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு விவசாயம் நடக்கிற கீழ்பவானி வாய்க்கால் தான் பிரதானமானது.
தற்போது கீழ்பவானி ஆயக்கட்டில் பொதுப் பணித்துறையினர் முதல் முறையாக முறை வைத்து நீர் விடும்முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதை கண்டித்து ஏராளமான விவசாயிகள் விவசாய சங்க தலைவர்கள் ரவி, துளசி மணி சுதந்திரராசு, செங்கோட்டையன் தலைமையில் ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணனிடம் மனு கொடுத்தனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, “கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி கீழ்பவானி அணையிலிருந்து கீழ்பவானி ஆயக்கட்டில் உள்ள 1.035 லட்சம் ஏக்கர் நஞ்சை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அரசு வெளியிட்ட உத்தரவின் படி அடுத்த 120 நாட்களுக்கு தடையின்றி நீர் விடப்படும். ஆனால் தற்போது அதிகாரிகள் வாரத்தில் ஒரு நாள் ஒவ்வொரு கிளை வாய்க்காலிலும் நீர் விடுவதை நிறுத்துகின்றனர்.
கடந்த 30 நாட்களில் நெல் நாற்று தயார் செய்யப்பட்டு தற்போது நடவு பணிகள் துவங்கியுள்ளன. நடவு பணியின் போது நீர் நிறுத்தப்படுவதால், நெல் நடவு மற்றும் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும் இதை குறிப்பிட்டு மனு அளித்தோம். ஆனால், அதிகாரிகள் கால்வாயில் அதிக நீர்க்கசிவு இருப்பதால் முறை வைத்து நீர் விடுவதாக கூறுகின்றனர். இதன் மூலம் கால்வாயில் கடைமடை பகுதிக்கு நீர் செல்லும் என்றும் தெரிவிக்கின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக இந்த நடைமுறை இல்லை இதை கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை அமலாக்க அதிகாரிகள் செய்யும் தந்திரமாக கருதுகிறோம்.
அணையில் மொத்தம் உள்ள 105 அடியில் 102 அடிக்கு தண்ணீர் உள்ளது. வழக்கமாக 2300 கன அடி நீர் பிரதான வாய்க்காலில் திறந்து விடப்படும். ஆனால், இப்பொழுது அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் விடுகிறார்கள். முறை நீர் பாசனம் விவசாயிகளுக்கு உதவுவதாக கூறுகிறார்கள். ஆனால், ஒருமுறை ஒரு கிளை வாய்க்காலில் நீர் நிறுத்தப்பட்டால் அந்த கிளை வாய்க்கால் உள்ள கடை மடைப்பகுதிக்கு தண்ணீர் சென்ற சேர இரண்டு நாட்களாகும். ஆயக்கட்டில் தொண்ணூறு சதவீத அளவிற்கு நெல் சாகுபடி தற்பொழுது செய்யப்படுகிறது. புதிய நடைமுறையால் அது முற்றிலும் பாதிக்கும். எனவே இதை எதிர்க்கிறோம். இது சம்பந்தமாக வரும் 30-ஆம் தேதி ஈரோடு கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ள வேளாண் குறை தீர்க்கும் கூட்டத்தில் பேச இருக்கிறோம். அடுத்த கட்ட போராட்டத்தையும் நடத்த இருக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.