நோய் வாய்ப்பட்டுள்ள வேதநாயகி என்னும் கோவில் யானையைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை நடைமுறைகளை மேற்கொள்ள மாவட்ட அளவிலான குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் பெண் யானை வேதநாயகி, கடந்த மூன்று ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், உரிய சிகிச்சை அளிக்கும் வகையில், முதுமலை யானைகள் முகாமுக்கு யானையை அனுப்பி வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெண் யானை வேதநாயகியின் கால்கள் காயமடைந்து மஞ்சள் போட்டு பிளாஸ்டிக் உறைகளைக் கொண்டு மூடி கட்டப்பட்டு உள்ளதாகவும், பாகன் யானையை முறையாகப் பராமரிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினார். முறையாக உணவு உட்கொள்ளாததால் யானை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், வளர்ப்பு யானையை அதன் உரிமையாளர் முறையாகப் பராமரிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு வளர்ப்பு விலங்குகள் பராமரிப்பு சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர். இந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஈரோடு மாவட்ட குழுவை அணுக மனுதாரருக்கு உத்தரவிட்டனர். மாவட்ட குழு, வன உயிரின காப்பாளர் மற்றும் கால்நடை மருத்துவர் நேரில் சென்று யானையைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.