தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.
சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார். “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.
மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.
இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.