சிவகாசி தாலுகா, புதுக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் விஜயபிரபாவுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரனுக்கும் கடந்த சில ஆண்டுகளாக நில அளவீடு செய்யும் விஷயத்தில் பிரச்சனை இருந்துள்ளது. இதை மனதில் வைத்திருந்த ரவிச்சந்திரன் பொது இடத்தில் வைத்து விஜயபிரபாவை ஒருமையில் அநாகரிகமாகப் பேசி, ‘அலுவலகத்தை தீயிட்டுக் கொளுத்திவிடுவேன் உன் முடிவு என்னால் நடக்கும்..’ என மிரட்டல் விடுத்துள்ளார்.
அரசுப் பணி செய்யவிடாமல் இடையூறு செய்து விஜயபிரபாவை மிரட்டி வந்த ரவிச்சந்திரன் குறித்து அந்தக் கிராமத்தினர் சிலர், ‘ரவிச்சந்திரன் உங்களைப் பற்றி முகநூலில் அவதூறாகப் பதிவிட்டிருக்கிறார். கடந்த ஆண்டிலிருந்தே இப்படி செய்துவருகிறார். அரசு அலுவலர்களை மட்டுமல்ல, முதலமைச்சரையும் அவதூறாகப் பதிவு செய்திருக்கிறார்.’ என்று கூறியிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை சிவகாசி வட்டாட்சியர் லோகநாதனிடம் விஜயபிரபா எழுத்து மூலமாக முறையிட, அவர் எம்.புதுப்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். ரவிச்சந்திரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகியிருக்கிறது.