சிவகாசியில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"தேர்தல் வரட்டும் பார்த்துக் கொள்வோம். அழகிரி, ரஜினி குறித்துச் சொல்லியிருப்பதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. வெளியில் இருந்து பேசுகிறார்கள். நாங்கள் களத்தில் இருக்கிறோம். அதிமுகவே வெற்றி பெறும். திமுக தோற்கும். நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சி ஆரம்பித்தபின் நடிக்கக் கூடாது. மக்களிடம் நடிக்கக் கூடாது.
சபரிமலை தீர்ப்பு குறித்து திமுகவினர் சபரிமலை செல்வேன் என்று சொன்னால், அதை ஐயப்பன் பார்த்துக் கொள்வார். வீம்புக்குச் செல்வேன் என்று சொல்வது, பிரச்சனைக்கு வழி வகுக்குமே தவிர முடிவுக்கு வராது. மதங்களிலேயே மூத்த மதம், தொன்மையான மதம், இந்து மதம். ஒவ்வொரு மதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில், இந்து மதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. இந்து மதக் கோவில்களில் கவர்ச்சி பொம்மைகள் கிடையாது. கலாச்சார பொம்மைகள் தான் இருக்கின்றன. கோபுரங்கள் மனிதர்களின் வாழ்வைக் குறிக்கிறது. இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசுவதை அரசியல் தலைவர்கள் குறைத்துக் கொள்ளவேண்டும்." என்றார்.