சிவகாசி மாநகராட்சிக்கு யார் மேயர்? யார் துணை மேயர்? என்பதுதான் ஊரில் விவாதிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. மேயருக்கு சங்கீதா பெயரும், துணை மேயருக்கு விக்னேஷ் பிரியா பெயரும் அடிபடுகிறது. ஏனென்றால், பெண் மேயராக வரக்கூடியவர், துணை மேயரும் பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவதுதான்.
விக்னேஷ் பிரியா
‘மேயர், துணை மேயர் இருவருமே அனுபவம் இல்லாத புதுமுகங்களாக இருந்தால், நகராட்சி நிர்வாகத்தை நல்லபடியாகக் கொண்டுசெல்ல முடியாதே?’ என்ற பொதுவான கேள்விக்கு, “ஊரு நல்லா இருக்கணும்னா, திமுக பாரம்பரியமுள்ள 47-வது வார்டு ஜெயராணியை மேயர் ஆக்கிவிட்டு, 40-வது வார்டு ஞானசேகரனை துணை மேயர் ஆக்குவதுதான் சரியாக இருக்கும்” என்பதே, நகர் நலனில் அக்கறையுள்ள திமுகவினரின் பதிலாக இருக்கிறது.
ஞானசேகரன்
அதே நேரத்தில், “சேர்மனாக இருந்த இரண்டு பீரியடிலும் ஞானசேகரன், நகராட்சி நிர்வாகத்தில் ஸ்ட்ரிக் ஆபீசராக அல்லவா நடந்துகொண்டார்? ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கெடுபிடி காட்டினாரே? பொதுமக்கள் பக்கம் நின்று சுயநலம்கொண்ட சிவகாசி முதலாளிகள் பலரையும் கடுமையாக எதிர்த்தாரே? காங்கிரஸிலிருந்து திமுகவுக்கு வந்தவர், கட்சி நிர்வாகிகளை எப்படி அனுசரித்துச் செல்வார்? யாரும் தவறான வழியில் வருமானம் பார்த்துவிட முடியாதபடி முட்டுக்கட்டை போடுவாரே? இந்த தடாலடி ஹீரோயிசத்தை கட்சியின் முக்கிய பிரமுகர்கள் யாரும் ரசிக்கமாட்டார்களே?” என நடைமுறைச் சிக்கல்களையும் சுட்டிக்காட்டினர்.
சங்கீதா
மேலும் அவர்கள், “ஊர் நன்மையா? அரசியல் கணக்கா? என்றெல்லாம் கேட்டுவிட முடியாது. ஏனென்றால், மேயர் ஆவதற்கு ரூ.5 கோடி என்று நிர்ணயித்துவிட, மேயர் நாற்காலியில் அமர்வதற்கு ஆர்வம் காட்டிவரும் 34-வது வார்டு சங்கீதா தரப்பிலும், 26-வது வார்டு சூரியா தரப்பிலும் ‘ஓ.கே.’ சொல்லிவிட்டனர்.
ரேணுநித்திலா
38-வது வார்டு ரேணுநித்திலா தரப்பில் ரூ.3 கோடி வரை பேசிப் பார்த்துள்ளனர். ‘இன்னைக்கு அஞ்சு கோடி போட்டா, நாளைக்கே பத்து கோடி எடுத்துடலாம்’ என்ற வியாபாரக் கணக்குக்கு முன்னால், மக்கள் நலனெல்லாம் பின்னுக்குப் போய்விட்டது. அதனால்தான், ‘ஞானசேகரனா? வேண்டவே வேண்டாம்..’ என அவருக்கு எதிர்ப்பு வலுவாக இருக்கிறது.” என்றவர்கள், “சிவகாசி வட்டாரத்தில் சுயநல நிர்வாகிகளால் பலவீனப்பட்டுப்போன திமுகவை தூக்கி நிறுத்தவேண்டுமென்றால், ஞானசேகரன் போன்ற ஆளுமை அவசியம் தேவை. அவரைத் துணை மேயர் ஆக்குவதோடு, சிவகாசி மாநகர செயலாளர் என்ற கட்சிப் பொறுப்பையும் கூடுதலாகத் தந்தால், ஊருக்கும் நன்மை; கட்சிக்கும் நன்மை. இதுவே, பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.” என்றனர்.
நல்லது நடந்துவிடுமா?