சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் விடுமுறை நாளான நேற்று (19.05.2024) கொள்ளை முயற்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தக் கொள்ளை முயற்சியின் போது வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். மேலும் இவர்கள் பணம் மற்றும் நகைகள் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தின் பூட்டை உடைக்க முயன்றுள்ளனர்.
அச்சமயத்தில் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அலாரம் ஒலித்துள்ளது. இதனைக்கேட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். வங்கியில் எந்தப் பொருளும் கொள்ளை போகவில்லை என இந்தியன் வங்கி தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அதே சமயம் சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனை கூட்டுறவு வங்கியிலும் கொள்ளை முயற்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொள்ளையடிப்பதற்காக வந்த மர்மநபர்கள் வங்கியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் வயர்களை துண்டித்து கதவை உடைத்துள்ளனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். இதனால் கூட்டுறவு வங்கியில் இருந்த சுமார் 4 கிலோ தங்க நகைகள் தப்பின. இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தப்பிச்சென்ற கொள்ளையர்களைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரே நேரத்தில் இரு வங்கிகளில் கொள்ளை முயற்சி நிகழ்ந்துள்ள சம்பவம் சிவகங்கை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.