திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள நகராட்சிப் பணியாளர்கள் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர் பாண்டியன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகள் சுகுணாவிற்குத் திருமணமாகி கணவர் ராம்ஜியுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கணவன் மனைவியான சுகுணாவிற்கும், ராம்ஜிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாகத் தகராறு ஏற்பட்டு சண்டை போட்டுக்கொண்டனர். இதனைத் தடுக்கச் சென்ற மாமியார் விஜயாவை, மருமகன் ராம்ஜி தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது வேலையில் இருந்து வீட்டிற்கு வந்த மச்சான் பரணி, எதுக்கு என் அம்மாவையும், அக்காவையும் அடிக்கிற என ராம்ஜியிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராம்ஜி கத்தியால் பரணியைக் குத்தினார். தடுக்க வந்த பரணியின் தாய் விஜயாவையும், சகோதரி கல்கியையும் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் விஜயா மற்றும் கல்கி ஆகியோர் படுகாயமடைந்தனர். பரணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார், பரணியின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். படுகாயம் அடைந்த விஜயா மற்றும் கல்கியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். கத்திக் குத்தால் குடல் வெளியே வந்த விஜயாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாமியார், மச்சினிச்சி, மச்சானைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்ட ராம்ஜியைக் கொலை வழக்கில் போலீசார் தேடிவருகின்றனர்.