புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் கொத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகள்கள் சுகுணா, சுகந்தி. இருவரும் மாற்றுத்திறனாளிகள். சுமார் 10 ஆண்டுகளாக வெளியுலகம் காணாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தாலும் சுகுணாவுக்கு புத்தக வாசிப்பும், கவிதை எழுதி வாசிப்பதும் வழக்கம். கவிதை எழுதும் தனித்திறமையால் 100க்கும் மேற்பட்ட பாராட்டுச் சான்று பெற்றுள்ளார் கவிஞர் சுகுணா பன்னீர்செல்வம். அதேபோல அவரது தங்கையான சுகந்தி பன்னீர்செல்வமும் ஒரு மாற்றுத்திறனாளிதான் என்றாலும் காகிதங்களில் ஓவியங்கள் வரைந்து சாதித்து வருகிறார். இருவருமே மாற்றுத்திறனாளிகள் அல்ல மாற்றத்திற்கான திறனாளிகள் என்பதைப் படுத்த படுக்கையில் இருந்தே சாதித்து வருகின்றனர்.
இவர்களுக்காகப் பெற்றோர் படும் சிரமம் சொல்லில் அடங்காது. இப்படியான சாதனையாளர்களில் ஒருவரான ஓவியர் சுகந்தி பன்னீர்செல்வத்திற்கு சளி தொல்லை ஏற்பட்டு கடந்த 8 நாட்களாக சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், கவிஞர் சுகுணா பன்னீர்செல்வம், 'என் தங்கை சுகந்தி உயிரைக் காப்பாற்றுங்கள் முதல்வர் ஐயா' என்று காணொளி மூலமாக முதலமைச்சருக்கு கண்ணீர் கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த காணொளியில் அவர் கூறியிருப்பதாவது, 'எனது தங்கை சுகந்திக்கு நுரையீரலில் சளி அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனக்கு என் தங்கை வேண்டும். நாங்கள் நலமாக இருந்து நல்லது செய்யணும். அதனால் என் தங்கை உயிரைக் காப்பாற்றிக் கொடுங்கள்'' என்று கண்ணீரோடு இரு கரம் கூப்பி கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் நம்மிடம் கூறும்போது, 'என் தங்கை உயிரைக் காப்பாற்ற முதலமைச்சரும், அமைச்சரும் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல எங்களை வெளியே அழைத்து செல்லும்போது பெற்றோர் எங்களை தூக்கிக்கொண்டுதான் போறாங்க. அதனால ஒரு பேட்டரி வீல்சேர் வாங்கிக் கொடுத்தால் கொஞ்சம் சிரமம் குறையும்'' என்றார்.