திரைத்துறையில் கிட்டத்தட்ட 10,100 பாடல்களுக்கு மேல் பாடி இன்றும் குரல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மறைந்த பாடகர் டி.எம். சௌந்தரராஜன். 60 வருடங்களுக்கு மேலாகத் திரைத்துறையில் பயணித்த இவர் தமிழைத் தவிர சௌராஷ்டிரா, கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார். முதல் பாடலைத் தனது 24வது வயதில் பாடினார். கடைசிப் பாடலை 88வது வயதில் பாடினார். தனது 90வது வயதில் உடல்நலக்குறைவால் 2013 ஆம் ஆண்டு காலமானார்.
அவரை கௌரவிக்கும் வகையில் டி.எம். சௌந்தரராஜனின் 100வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு ‘டி.எம். சௌந்தரராஜன் சாலை’ என்ற பெயரை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி சூட்டிப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி மதுரை முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறையின் மூலம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது சிலை அருகே அமைந்துள்ள சுற்று வேலிகளில் இசைக் கருவிகளின் படங்கள் இடம் பெற்றுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். முழு உருவச் சிலையைத் திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாடகர் டி.எம். சௌந்தரராஜன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க. பொன்முடி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, மு.பெ. சாமிநாதன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பி. மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் வி. இந்திராணி பொன் வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பூமிநாதன், கோ. தளபதி, துணை மேயர் டி. நாகராஜன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த. மோகன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். சங்கீதா, டி.எம். சௌந்தரரராஜன் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.