தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மேத்தா, பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு, 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்' வழங்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் கலைத்துறை வித்தகர் விருது கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி சுசீலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் பாடகி சுசிலாவுக்கு விருதை தமிழக முதல்வர் வழங்கினார். உடன் அமைச்சர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுசிலாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த தமிழக முதல்வர், அவருடைய குடும்ப உறுப்பினர்களிடமும் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நீர்வளத்துறை சார்பாக 83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் மற்றும் புனரமைக்கப்பட்ட வாய்க்கால் மற்றும் ஆணைகளுடைய மறு கட்டுமான பணி உள்ளிட்ட 19 திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார். மேலும் இந்துசமய அறநிலையத்துறையில் உள்ள அட்சகர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வை முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார்.