தமிழக இளைஞர்கள் பல்வேறு பட்டப் படிப்புகளைப் படித்த பிறகு வேலைக்காக வெளிநாடு சென்று சம்பாதித்து வருகின்றனர். இதில் சிங்கப்பூரில் அதிகமான தமிழக இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். படிப்பை முடித்ததும் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் திருமணங்களுக்காகச் சொந்த ஊர் வரும்போது பல நிறுவனங்கள் வாழ்த்தி கல்யாணப் பரிசுகளும் வழங்கி அனுப்பி வைக்கின்றனர்.
சமீப காலமாக சிங்கப்பூரில் வேலை செய்யும் இளைஞர்களின் நிறுவன முதலாளிகள், மேலாளர்கள் பிளைட்டில் பறந்து வந்து நேரில் மணமக்களை வாழ்த்திச் செல்கின்றனர். கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட சிங்கப்பூர் நிறுவன முதலாளி, மணமக்களை வாழ்த்தி கல்யாணப் பரிசு வழங்கியதுடன் அப்பகுதி அரசுப் பள்ளிகளுக்கு கணினி பொருட்கள் வாங்க நிதி வழங்கிச் சென்றார்.
அதேபோல ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் கருக்காக்குறிச்சி செல்வம் சகோதரர்கள் திருமணத்திற்கு, சிங்கப்பூர் நிறுவன உரிமையாளர் கால்லின், நிறுவன திட்ட இயக்குநர் ஹம்மிங்க், திட்ட மேலாளர் டிம் ஆகியோர் நேரில் வந்தனர். அவர்களைச் செண்டை மேளம் முழங்க பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்துச் சென்று ஆரத்தி எடுத்து மரியாதை செய்தனர். தமிழ்நாடு கலாச்சாரத்தைப் பார்த்து வியந்த சிங்கப்பூர்க்காரர்கள் ‘ஐ லவ் இந்தியா’ என்று கூறி மகிழ்ந்தனர்.
அடுத்த நாள் தனது நிறுவன ஊழியர் செல்வம் படித்த கருக்காக்குறிச்சி அரசுப் பள்ளிக்கு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்த நிதி வழங்க வருவதை அறிந்த கிராம மக்களும் பள்ளி மாணவ, மாணவிகளும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள் உடனேயே ரூ. 1 லட்சம் நிதி வழங்கியதோடு மேலும் நிதி வழங்கத் தயாராக உள்ளோம் என்றனர்.
இதனைப் பார்த்த கிராம மக்கள், ‘எங்கிருந்தோ வந்து எங்க குழந்தைகளின் கல்விக்காக; எங்க ஊரு அரசுப் பள்ளிக் கூடத்தை வளமாக்க நிதி தந்த தொழிலதிபர்களை பாராட்டுகிறோம். இதுபோன்றவர்களால் கிராமத்து ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தொழில்நுட்ப வளர்ச்சியடைவதை பெருமையாகப் பார்க்கிறோம்’ என்கின்றனர்.