சேலத்தில், வெள்ளி வியாபாரி கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படை கும்பல் தலைவன் கோழி பாஸ்கர், நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர் (49). வெள்ளி வியாபாரி. இவர், பிப். 2ம் தேதி அதிகாலையில் பால் வாங்குவதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். இந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், சங்கர் விபத்தில் சாகவில்லை என்பதும், அவரை திட்டமிட்டு கார் ஏற்றிக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.
சங்கரின் மைத்துனர் சுரேஷ்பாபு என்பவர்தான் கூலிப்படையை வைத்து கார் ஏற்றிக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. சுரேஷ்பாபு, அவருடைய கூட்டாளிகள் 3 பேர், கூலிப்படை கும்பல் தலைவன் கோழி பாஸ்கரின் இரட்டை சகோதரிகள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கோழி பாஸ்கர், அவருடைய தம்பி ராஜா ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர். கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின்பேரில் தனிப்படை காவல்துறையினர் அங்கும் விரைந்தனர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை.
இந்நிலையில், கோழி பாஸ்கர் சேலம் 4வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் பிப். 22ஆம் தேதி, நீதிபதி யுவராஜ் முன்னிலையில் சரணடைந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அதேநேரம், தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் கோழி பாஸ்கரின் தம்பி ராஜாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் சிறையில் ஏற்கனவே சில வழக்குகளில் கோழி பாஸ்கர் அடைக்கப்பட்டு இருந்தபோது, கைதிகள் சிலருடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அவர்களும் தற்போது வெளியே இருக்கின்றனர். அந்த சிறை நண்பர்கள் மூலமாக கோழி பாஸ்கருக்கு புதிய சிம் கார்டுகள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் ஓசூர், பெங்களூரு பகுதியில் பதுங்கிக் கொள்ளவும் உதவி செய்துள்ளனர். கோழி பாஸ்கரின் செலவுக்காக கூகுள்பே செயலி மூலமாக அவ்வப்போது பணமும் அனுப்பி வைத்துள்ளனர். அதனால்தான் கோழி பாஸ்கரை எளிதில் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள்.