மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை -எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு
நீட் துரோகத்தை கண்டித்து மத்திய அரசு அலுவலங்கள் முற்றுகையிடப்படும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சமூக நீதியை காக்கும் பொருட்டு, மருத்துவக் கல்வி சேர்க்கையில் மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டப்படி நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வால், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும், கிராமப்புற ஏழை மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் இதனால் மருத்துவக் கல்வி சேர்க்கையில் கல்வி தீண்டாமையை அது உருவாக்கிவிடும் என்று நீட்டால் ஏற்படப்போகும் அபாயம் குறித்து தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்ட போதும், நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக இரு மசோதாக்களை நிறைவேற்றிய போதும், மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கையால் அந்த மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டு, சி.பி.எஸ்.இ.-ன் பல்வேறு அநீதிகளுடன் தமிழக மாணவர்கள் நீட் தேர்வெழுதினர்.
இந்நிலையில் தமிழக அரசை பல்வேறு வகைகளில் ஆட்டிப்படைக்கும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் அமைச்சரான நிர்மலா சீதாராமன், நீட் தேர்வு தமிழக கிராமப்புற ஏழை மாணவர்களையும், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களையும் பாதிக்கும் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, வேண்டுமானால் தமிழக அரசு தற்காலிகமாக நீட்டிலிருந்து ஓர் ஆண்டு விலக்கு வேண்டும் என அவசர சட்ட முன்வடிவை கொண்டுவந்தால் மத்திய அரசு அதற்கு ஒத்துழைக்கும் என்றார். இதையடுத்து அவர் கூறியபடி அவசர சட்ட முன்வடிவை தயார் செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அளித்தது. தொடர்ந்து அவசர சட்டத்துக்கான ஒப்புதல் குடியரசு தலைவரிடமிருந்து கிடைக்கப் பெறும் என ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்த வேளையில், அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தெரிவித்து தமிழகத்துக்கு மிகப்பெரும் துரோகத்தை இழைத்துள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து அவசர சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று கூறிவிட்டு உச்ச நீதிமன்றத்தில் நேர்மாறாக பல்டி அடித்து தமிழக மாணவர்களை நம்பவைத்து மத்திய பாஜக அரசு ஏமாற்றி விட்டது. பாஜகவின் இந்த துரோக செயலை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
இந்நிலையில் நீட் தேர்வு அடிப்படையில் வெளியிடப்பட்ட மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் மூலம் கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்ற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு கானல் நீராகிபோயுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சரியான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை என்பதை மறுக்க முடியாது. மாநில உரிமையை மத்திய அரசிடமிருந்து பெறுவதிலும், நீதிமன்ற நடவடிக்கை மூலமாக மாநில உரிமையை தக்கவைப்பதிலும் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது.
நீட் விவகாரத்தில் தமிழக நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டித்து, வரும் ஆகஸ்ட் 30 அன்று சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். சமூக நீதியை காக்கும் வகையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும், மாணவர்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.