கரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் அந்தந்த பகுதிகளில் உள்ள முன்னாள் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் மற்றும் மாவட்ட செயலாளர்களையும் களம் இறக்கி தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பு உபகரணங்களை வழங்க வலியுறுத்தி உள்ளார். அதுபோல் தமிழகம் முழுவதும் பொறுப்பில் உள்ளவர்களும் கரோனா தடுப்பு உபகரணங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் இருக்கும் கள்ளிமந்தையம் ஊராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், ஒட்டன்சத்திரம், பழனி வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலக அதிகாரிகள், உதவியாளர்கள், பணியாளர்கள், கூட்டுறவு சங்க அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவ உபகரணங்களான கிருமிநாசினி சோப்பு, முககவசம் ஆகிய மருத்துவ உபகரணங்களை மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான கொறடா சக்கரபாணி தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்தார்.
மேலும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை மற்றும் தொகுதியில் உள்ள 11 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நகராட்சி அலுவலகத்திலும், போதுமான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளனவா என்று சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி ஆய்வு செய்து, மேலும் மருத்துவ உபகரணங்களை கேட்டு அதன் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்தார், அதுபோல் வெளி தொடர்பின்றி தனிமைப்படுத்தப்பட்டு, காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி மற்றும் ஏ.ஏ.எஸ்.எம். பேட்டையில் உள்ள பொது மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேலை சந்தித்து வலியுறுத்தியும் உள்ளார்.
அதுபோல் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சிகள். தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகள், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நான்கு ஊராட்சிகள் ஆக மொத்தம் 77 ஊராட்சிகள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சி. கீரனூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு 20 லட்சம் செலவில் முககவசம், கிருமிநாசினி, சோப்பு உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு பொருட்களை, அந்தந்த பகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் மூலம் கொடுத்து, அந்தந்த பகுதியிலுள்ள பொது மக்களுக்கு வழங்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.