கடலூர் அருகே கோவில் நிலத்தை ஏலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில் திருக்கண்டீஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவில் எய்தனூர் ஆதிபுரீஸ்வரர் கோவில். இந்த 3 கோவில்களும் தமிழக அரசு இந்து அறநிலையத்துறை பொறுப்பில் உள்ளன. மேற்படி மூன்று கோவில்களுக்கும் சுமார் 100 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் குத்தகைக்கு விடும் போது எல்லாம் அப்பகுதியைச் சேர்ந்த பலர் சிண்டிகேட் அமைத்து குறைந்த தொகைக்கு குத்தகைக்கு எடுப்பது நடந்து வந்துள்ளது.
அப்பகுதியில் தனியார் நிலங்கள் ஒரு ஏக்கருக்கு சுமார் முப்பதாயிரம் வரை குத்தகைக்கு விடப்படும் நிலையில் கோயில் நிலங்கள் மட்டும் ஏக்கருக்கு 5,000 ரூபாயென குறைந்த குத்தகைக்கு விடப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 26 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
இதையறிந்த பக்கத்து ஊரைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் ஏலம் எடுப்பதற்கு அங்கு வருகை தந்திருந்தனர் அதைப்பார்த்த உள்ளூரைச் சேர்ந்த சிலர் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே கோயில் நிலத்தைக் குத்தகைக்கு விட வேண்டும் என்று பிரச்சனை செய்துள்ளனர். இது அங்கு ஒரு சலசலப்பை உருவாக்கியது இதையடுத்து தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் அங்கு நடைபெறவிருந்த ஏலத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறும் உயர்அதிகாரிகளிடம் பேசி வேறு ஒரு தேதியில் ஏலம் நடத்த அனுமதி பெற்று மீண்டும் ஏலத்தை நடத்துவது என முடிவு செய்தனர்.
அதன்படி செயல் அலுவலர் மகாதேவி இதற்கான அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவில் நிலங்களுக்கான குத்தகை ஏலம் நடப்பதற்கு முன்பு போதிய அளவு விளம்பரம் செய்ய வேண்டும். அதனைப் பார்த்துவிட்டு பல்வேறு ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் கூடுதல் தொகைக்கு ஏலம் எடுப்பார்கள். இதனால் கோயிலுக்கு வருமானம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
கோயில் நிலம் குத்தகை எடுப்பது உள்ளூர் ஆட்களா? வெளியூர் ஆட்களா? என்ற போட்டி ஏற்பட்டுள்ளதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட ஏலம் மீண்டும் நடைபெறும் போதுதான் தெரியும் கோயில் நிலங்களை யார்? யார்? குத்தகைக்குக் எடுக்கப் போகிறார்கள் என்று.