கரோனா வைரஸுக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சை உள்ளதாக மூலிகை மருத்துவரான கீழ்வேளூர் மணிவாசகம் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்த வைத்தியர் மாணிக்கவாசகர். இவர் அந்த பகுதியில் சித்த வைத்தியத்தில் பிரபலமானவரும் கூட. அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "எய்ட்ஸ் நோய் பரவியபோது சித்த மருத்துவர்களை அழைத்து அரசு ஆலோசித்தது, அதன் பின் நோயாளிகளுக்கு ரசகெந்தி மெழுகு, அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம்னு வழங்கப்பட்டது. இதனால் நோயாளிகளின் ஆயுள் நீட்டிப்பு உறுதி செய்யப்பட்டது.
பிறகு டெங்கு பரவியபோது நிலவேம்பு கசாயமும், பப்பாளியும் வழங்க சித்த மருத்துவர்கள் கொடுத்த ஆலோசனையை அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றுச் செயல்படுத்தினார். அதுபோல இப்போது ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் சுவாச மண்டலத்தை தாக்கக்கூடியது, அதற்கு பச்சை கற்பூரம் கலந்த திருப்பதி லட்டு, துளசி தீர்த்தம், அசோகா ஆகியவற்றை சரியான அளவில் உட்கொண்டாலே போதும் நோயை விரட்ட முடியும். இது பற்றி சித்த மருத்துவர்களை அழைத்து ஆலோசித்து நோயிலிருந்து காப்பாற்றலாம். சித்த மருத்துவத்தில் தீர்வு இல்லாத நோய்களே இல்லை. எனவே அரசு இதனை பரிசீலிக்க வேண்டும்." இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.