Skip to main content

“வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக சித்தராமையா பேசுவது வருத்தத்தை தருகிறது” - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

"Siddaramaiah's speech is sad " - Minister Duraimurugan's speech

 

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் பகுதியில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மகளிர் உரிமை திட்டத்தினை துவக்கி வைத்து தகுதியான மகளிருக்கு உரிமை தொகையினை வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி வருகிறது. அதில் ஒரு திட்டம்தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம். வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வேலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் தொழிற்பேட்டை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ''கர்நாடகாவிடம் காவிரியில் தண்ணீர் கேட்பது நம்முடைய உரிமை. மேலும் உச்சநீதிமன்றத்தால் அறிவித்து சொல்லப்பட்ட உரிமை. கர்நாடக அரசு இப்போது தண்ணீர் இல்லை என்கிறார்கள். அதற்காக மழை வந்து ஏராளமான தண்ணீர் வந்தால் தான் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க முடியும் குறைந்த தண்ணீர் உள்ளபோது கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது. காவிரியில் கையளவு தண்ணீர் இருந்தாலும் அதை எங்களுக்கு பங்கிட்டு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கின்றது. ஆனால் கர்நாடக அரசு ஆங்காங்கே அணைகளில் தண்ணீரை நிறுத்தி வைத்துக் கொண்டுள்ளது.

 

கே.ஆர். சாகர் அணையில், அதேபோன்று மற்ற அணைக்கட்டுகளிலும் தண்ணீரை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் இருக்கிற தண்ணீரில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர வேண்டும் என்று நாங்கள் கர்நாடக அரசிடம் கேட்கவில்லை. நாங்கள் கேட்டது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கேட்டோம். அவர்கள் உடனே கண்ணை மூடிக்கொண்டு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை கொடுக்க வேண்டும் என்று சொல்லமாட்டார்கள். ஏனென்றால் காவிரி மேலாண்மை ஆணையம் இரண்டு மாநிலத்திற்கும் பொதுவானவர்கள்.

 

அவர்கள் கர்நாடகா மாநிலத்தின் அணைகளில் இருக்கக்கூடிய இருப்புகளை கணக்கிட்டு அவர்கள் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை தரலாம் என்று முடிவு செய்து அறிவித்துள்ளார்கள். ஆகையால் அந்த தண்ணீரை விடமாட்டேன் என்று சொல்வது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட  கான்ஸ்டியூசன் அத்தாரிட்டி உத்தரவை மீறுவதாகும். இந்தப் போக்கு சரியானது அல்ல. அதற்காக அவர்கள் சர்வ கட்சி கூட்டத்தை கூட்டினால் அதனால் ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. நாம் சர்வ கட்சியை கூட்ட முடியாதா என்றால் கூட்டலாம். அது ஒன்றும் பெரிய தவறல்ல. ஆனால் வரும் 21 ஆம் தேதி இதில் இந்த வழக்கு வருகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது என்ன நடந்தது என்பதை எங்கள் மூத்த வழக்கறிஞர் தெரிவிக்க இருக்கிறார்கள். அதைக் கேட்ட பிறகு உச்சநீதிமன்றம் என்ன ஆணையிடுகிறதோ அதற்கு கட்டுப்பட வேண்டும். அதற்குப் பிறகு நமக்கு சாதகமாக இல்லை என்றால் அடுத்து சர்வ கட்சி கூட்டத்தைக் கூட்டி என்ன செய்வது என்று யோசிக்கலாம்.

 

இது எப்போது பார்த்தாலும் கர்நாடக மாநிலத்தில் நடக்கின்ற திருவிளையாடல்கள். ஆனால் ஒன்று, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மூத்தவர், அரசியலில் முதிர்ந்தவர், கலைஞருக்கு வேண்டியவர் எனக்கு மிக நெருக்கமானவர். இவர் கூட நிலைமையை புரிந்து கொள்ளாமல் பேசி இருப்பது ஆச்சரியம்.

 

கர்நாடக மாநிலத்தில் நீர்வளத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய சிவக்குமார், மேகதாது அவர் தொகுதியில் வருகிறது. அவர் மேகதாது கட்டுவதற்கு உணர்ச்சிவசப்படலாம் அவர் அப்பேர்பட்டவர் தான். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. அவர் நிலைமைகளை தெரியாமல் அவர் தண்ணீர் திறக்க முடியாது என்று பேசி இருக்கிறார். பத்து முதலமைச்சர்களை நான் இந்த காவிரி விவகாரத்தில் பார்த்திருக்கிறேன். காவிரி பிரச்சனை ஆரம்பத்தில் இருந்து இந்த இலாகாவை கையில் வைத்திருப்பவன் நான். எனக்கு ஒவ்வொரு அளவும் தெரியும். ஆகையால் இன்னும் நான் சித்தராமையாவிடம் மரியாதையுடன் கேட்கிறேன். ஐயா நீங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தருவது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் இப்படி வெட்டு ஒன்னு துண்டு இரண்டு என்று பேசுவது என் மனதிற்கு வருத்தத்தை தருகிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்