![a](http://image.nakkheeran.in/cdn/farfuture/9QGYqYFOomZpaMq3HBOG1oiqEWYtSh2f679doWGTnCY/1546388028/sites/default/files/inline-images/accused-SSi%20subramani.jpg)
சேலத்தில் வாலிபர்களை கடத்தி பணம் பறித்த வழக்கில் எஸ்ஐ சுப்ரமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்தவர் சக்திவேல் (20). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவர், ஒரு பார்சலை கொடுத்து, சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் உள்ள தனது நண்பர்களிடம் கொடுத்து விடும்படி கூறியிருந்தார்.
இதையடுத்து, கொண்டலாம்பட்டி வந்த சக்திவேல் மற்றும் அவருடைய நண்பர் பிரபாகரன் ஆகியோரை 7 பேர் கும்பல் கடத்திச்சென்றது. அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு குடோனில் அடைத்து வைத்து தாக்கிய அந்த கும்பல், இருவருடைய ஏடிஎம் கணக்கில் இருந்தும் 43 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டனர்.
பின்னர் விடுவிக்கப்பட்ட சக்திவேலும், பிரபாகரனும் தாங்கள் கடத்தப்பட்டது குறித்தும், மர்ம கும்பல் பணப்பறிப்பில் ஈடுபட்டது குறித்தும் சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். இந்த வழக்கு தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் எஸ்ஐ ஆக பணியாற்றி வந்த சுப்ரமணி என்பவருக்கும் இந்த சம்பவத்தில் நேரடி தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சக்திவேலிடம் பறித்த பணத்தில் எஸ்எஸ்ஐ சுப்ரமணியமும் 10 ஆயிரம் பெற்றுக்கொண்டதோடு, கடத்தல் சம்பவத்தை மூடி மறைத்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து எஸ்எஸ்ஐ சுப்ரமணியமும் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதை அடுத்து, நேற்று (டிசம்பர் 31, 2018) அதிரடியாக பணியிடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார்.