சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் தேர்தல் கடந்த ஆண்டு ஏப்.24-ந்தேதி நடைபெற்றது. திமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் 11 பேரும், த.மா.கா சார்பில் முன்னாள் சேர்மன் பாலசுப்பிரமணியன் தலைமையில் 11 பேரும் போட்டியிட்டனர்.
ஆனால், உறுப்பினர் சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால், வாக்கு எண்ணிக்கை நடத்தாமலே, வாக்கு பெட்டிகள் சங்க அலுவலத்திற்குள் வைத்து பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. பூட்டிய அந்த அறைக்குள் தான் அலுவலக கோப்புகள், மாட்டுத் தீவனம் போன்றவை இருப்பது தெரியாமல் 'சீல்' வைத்துவிட்டனர்.
இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டதோடு, கறவை மாடுகளுக்கும் தீவனம் வழங்கமுடியாத நிலை நீடித்தது. இதையடுத்து மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டதால் இரு தரப்பினரின் முன்னிலையில் 'சீல்' அகற்றி, ஆவணங்களை எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி நேற்று இதற்கான பணிகள் நடந்தன. அங்கு வந்திருந்த நிர்வாகிகள் அமர பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன. திமுகவினர் தங்களுக்கு தரமான நாற்காலி வேண்டும் என்றன. உடனே அங்கிருந்த பிளாஸ்டிக் சேர்கள் மாற்றப்பட்டு, வயரால் பின்னப்பட்ட நாற்காலி போடப்பட்டது. உடனே த.மா.காவினரும் எங்களுக்கும் வயரால் பின்னப்பட்ட சேர் வேண்டும் என அடம்பிடித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பில் முடிந்தது.
காங்கிரசுக்கே உரிய பாணியில் த.மா.கா நிர்வாகிகள் நாற்காலிகளை தூக்கி வீசினர். இதற்கு திமுகவும் சளைக்காமல் ஈடு கொடுத்து நாற்காலிகளை வீசி பதிலடி கொடுத்தனர். இந்த கொடுமைகளை பார்த்த போலீஸார், தலையில் அடித்துக் கொண்டு, அவர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்தனர். வேடிக்கை பார்த்த மக்களும் இந்த சண்டையை பார்த்து கேலியாக சிரித்து சென்றனர்.
ஸ்ஸ்ஸ்......கொடுமைடா சாமி..!