வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (19.09.2023) நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதோடு, உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக்கொள்கிறேன். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களைத் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உடனுக்குடன் அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்டந்தோறும் அனைத்துத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஒத்திகைப் பயிற்சிகள் நடத்துவதோடு, பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைத்திடவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வடகிழக்குப் பருவமழையின் போது, பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பேரிடர்களின் போது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், அரசு துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.