தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்சி நம்பர்.1 சுங்கச்சாவடி மற்றும் இ.புதூர் பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள நான்கு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரின் உத்தரவின் பேரில் அந்த நான்கு கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது.
மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது அல்லது பதுக்கி வைப்பது போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று உணவு சம்பந்தமான கலப்படங்களையும் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பொதுமக்களும் தாங்கள் உணவுப் பொருள் வாங்கும் கடைகளில் கண்டறிந்தால் புகார் அளிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.