பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி திருவரங்கம் கோயிலைச் சுற்றி உத்தரவீதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் நேற்று(வியாழக்கிழமை) முதல் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி சனிக்கிழமை காலை தரிசனம் செய்யவுள்ளார். இதனையடுத்து மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளில் மற்றுமொரு அங்கமாக, கோயிலுக்குள் உள்ள சுமார் 50 கடைகள் புதன்கிழமை மாலையே மூடப்பட்டுவிட்டன.
கோயில் ரங்கா கோபுரத்தை ஒட்டி சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் அமைந்துள்ள கடைகள் அனைத்தும் வியாழக்கிழமை மாலை முதல் மூடப்பட்டுவிட்டன. சில கடைகள் ஆக்கிரமித்து சாலையில் இடையூறாக இருந்தவைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். போலீஸார் கெடுபிடி காரணமாக, வியாழக்கிழமை பிற்பகல் முதலே கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து காணப்பட்டது. இன்று(19.1.2024) மாலை 6 முதல் நாளை(20.1.2024) பிற்பகல் 3 மணி வரையில் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கோயில் வளாகத்தில் மொத்தம் 54 சந்நிதிகள் அமைந்துள்ளன அவற்றில் கோயில் பணியாளர்கள் தாற்காலிக பணியாளர்களையும் சேர்த்து குறைந்த பட்சம் தலா 5 முதல் 10 பேர் பணியிலிருப்பது வழக்கம். ஆனால் பிரதமர் வருகை பாதுகாப்பு காரணமாக, ஒவ்வொரு சந்நிதியிலும் தலா ஒருவர் மட்டுமே பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பணியாற்றுபவரின் விவரங்கள், ரேகை உள்ளிட்டவை ஏற்கெனவே போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
கோயில் தற்காலிக பணியாளர்கள் அனைவரும் 3 நாள்களுக்கு கோயிலுக்குள் அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளிட்டகரையில் உள்ள பஞ்சக்கரை பகுதிகள், அரங்கநாதர் கோயில், ஹெலிப்பேடு, அங்கிருந்து பிரதமர் கோயிலுக்கு வரும், திருப்பிச் செல்லும் வழிகள், கோயிலைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகள் அனைத்தும் முற்றிலுமாக போலீஸார் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. போலீஸாரின் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக, பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் அதிருப்தி தகவல்கள் வெளியாகியுள்ளன.