திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. இந்தக் கடைகளில் ஆவின் பாலகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடைக்கு முன்பு உள்ள நடைமேடை பகுதியில் பெண்கள் சிலர் பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது சில பெண்கள் அமர்ந்திருந்தனர். இதனைப் பார்த்த கடைக்காரர் அவர்களை எழுந்து போகச் சொல்லாமல் தண்ணீரைக் கொண்டு வந்து நடைமேடையில் ஊற்றியதோடு பெண்கள் மீதும் ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அதில் பெண்கள் சிலர் 'ஏன் மேலே தண்ணீர் ஊற்றினீர்கள் எழுந்து போகச் சொன்னால் போயிருப்போமே' எனக் கேட்க, கடையின் உரிமையாளர் 'இந்த இடம் எங்களுக்குச் சொந்தமானது; நாங்கள் எடுத்துள்ளோம் இங்கு உட்காரக்கூடாது' எனக் கண்டிக்கும் வகையில் பேசி இருந்தார்.
இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இன்று மாலை மாநகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் வரம்பை மீறிச் செயல்படும் கடைகளில் ஆய்வு நடத்தியதோடு, கடைக்கு வெளியே அத்துமீறி ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்து மாநகராட்சி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். சில கடைகளை இழுத்து மூடிச் சென்றனர்.