தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலையால் மாவட்டத்தில் நிலம், நீர், காற்று என அனைத்தும் நஞ்சாக மாறிப்போய் விட்டது. இதனால் கொதித்துப்போன குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி கிராமமக்கள் தங்களது ஊர்களிலேயே ஒன்றுகூடி கடந்த சில வாரங்களாக ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, கடந்த மாதம் 24ம் தேதி தூத்துக்குடி மாநகரில் வியாபாரிகள் அனைத்துக்கடைகளையும் 24மணிநேரமும் அடைத்து பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஒரே காரணத்திற்காக மாவட்ட ஆட்சியர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளை தூண்டிவிட்டு வணிகர்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் கடைகளில் திடீரென்று தேவையில்லாமல் சோதனைகளை மேற்கொண்டு வருகிறார். ''பாலிதீன் பைகள்'' பயன்படுத்துவதாக கூறி, கடைகளில் ''பாலிதீன் பை'' இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொத்தாம்பொதுவாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஸ்பாட் பைனாக விதித்து வசூலித்து வருவதை தி.மு.க.இளைஞர் அணி வன்மையாக கண்டிக்கிறது. வியாபாரிகளை மிரட்டும் நோக்கத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கைக்கூலியாக செயல்பட்டுவரும் போக்கினை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இத்தோடு நிறுத்திக்கொள்ளவேண்டும்.
குடிநீர் குடிப்பதற்கு முடியாமல் விஷமாகிவிட்ட நிலையில் கும்மரெட்டியாபுரம் கிராமமக்கள் ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலையை நிரத்தரமாக மூடவலியுறுத்தி கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். தங்களது குழந்தைகள், குடும்பத்தினருடன் கடும் வெயிலில் அமர்ந்து அறவழியில் போராட்டம் மேற்கொண்டுவரும் கிராமமக்களுக்கு பந்தல் அமைக்கவும், அவர்களை பிறபகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் சந்தித்து பேசவும் தடைபோட்டு, ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டி வரும் மாவட்ட காவல்துறை தனது போக்கை உடனடியாக மாற்றிக்கொள்ளவேண்டும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் பஸ் நிலையம், ரயில் நிலையம், விமானநிலையம், அரசுமருத்துவமனை மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விளம்பர பலகைகளை உடனடியாக அகற்றிடவேண்டும். இல்லாவிட்டால் இதனை பொதுமக்களுடன் இணைந்து கழக இளைஞர் அணியினரான நாங்களே அதிரடியாக அகற்றிடுவோம்.
''மாநகர மேம்பாடு வளர்ச்சி'' என்ற பெயரில் ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலையிடம் இருந்து இனிமேல் நிதிபெற்று வளர்ச்சிப்பணிகளை செய்யும் முடிவினையும் மாவட்ட நிர்வாகம் நிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லையெனில் ஸ்டெர்லைட் நச்சுஆலையிடம் கையேந்தும் மாவட்ட ஆட்சியரை கண்டிக்கும் வகையில் அவரது இல்லத்தை அதிரடியாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்திடுவோம்." என தி.மு.க. இளைஞரணி சார்பில் ஜோயல் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.