சபரிமலைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி இதுவரை 357 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இயற்கை பேரிடர் அம்மாநில உட்கட்டமைப்புக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், ஆண்டுதோறும் ஓணம் திருநாளையொட்டி வழிபாட்டுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் செல்வது வழக்கம். வரலாறு காணத மழை வெள்ளம் மண்சரிவு ஆகியவற்றால் கேரளம் முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே கிடப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும் பம்பையாற்றில் இன்னும் வெள்ளத்தின் அளவு குறையவில்லை. இதனால் வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் பக்தர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.